கொரோனா ஊரடங்கால் தமிழக அரசின் வரி வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டம் விரைவில் அமலாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் மதுபான வகைகளின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசு டாஸ்மாக் நிறுவங்களின் மூலம் சில்லரை மதுபான விற்பனையை நடத்தி வருகிறது. மது வகைகள் மீதான ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாகவும் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. அரசுக்கு எப்போதும் லாபம் ஈட்டும் வியாபாரமாக டாஸ்மாக் இருந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் ஊரடங்கு நெருக்கடிக்கு மத்தியிலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன.
டாஸ்மாக் கடைகள் மூடல்
திமுக அரசு பொறுப்பேற்றதை அடுத்து கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதன் காரணத்தினால் அரசுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி வருவாய் பாதித்தது குறிப்பிடத்தக்கது. இதனை ஈடு செய்யும் வகையில் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டது. இருப்பினும் ஜூன் 14ஆம் தேதி முதல் நோய்த்தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது .
தீவிரமாக நடக்கும் வணிகம்
மதுபானங்களின் விலை உயர்த்தப்படாமல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரேமாதிரியான தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை மதுபானங்களின் விலை உயர்த்தப்படவில்லை.
மதுபான விலை உயர்வு
நேற்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் மதுபான வகைகளின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இது குடிமகன்களுக்கு பேரதிர்ச்சியாக நேர்ந்தது. இதேபோல் தமிழகத்திலும் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு மதுபான வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால், இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு முன்கூட்டியே செய்து வருகிறது. எனவே பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக விலை உயர்வு அமலுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
நாட்டின் முதல் தானிய ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது! இனி வரிசையா காத்திருக்க தேவை இல்லை!!
Breaking: ஒரே மாதத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்!!
விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில் 5 முக்கிய மாற்றங்கள்!