ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றைய தினம் தான் பங்கேற்ற நிகழ்வில் அனைத்து கிராமப்புற பிராந்திய வங்கிகளையும் முழு டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் விவசாயிகளுக்கு கடன்கள் வழங்குவதை விரிவாக்கம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
வேளாண் துறை சார்பில் நேற்று (19.09.2023) டெல்லியிலுள்ள பூசா வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் விவசாயிகளுக்கு நிதி சேவைகளை அணுகுவதை வலுப்படுத்த மூன்று புதிய முயற்சிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
முதல் நிகழ்வாக கிசான் ரின் போர்ட்டலை தொடங்கி வைத்து, PM kisan பயனாளிகள் உள்பட கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் பலனை அனைத்து விவசாயிகளும் பெறுவதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் KCC பிரச்சாரத்தை (Door-to-door KCC campaign) அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் ஒருங்கிணைந்த விவசாயத்திற்கான வானிலை போர்டலையும் சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
கிசான் ரின் போர்ட்டல், பல அரசுத் துறைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது, இது ஒரு டிஜிட்டல் தளமாகும், இது விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதிச் சேவைகள், கடன் வழங்குதல், வட்டி மானியக் கோரிக்கைகள் மற்றும் பயன்பாடு பற்றிய விரிவான தரவுகளை வழங்கும். நேற்று தொடங்கி வைக்கப்பட்ட WINDS எனப்படும் வானிலை தகவல் நெட்வொர்க் தரவு அமைப்பானது விவசாய வானிலை தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கும் ஆன்லைன் தளமாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதாராமன் தனது உரையில், “கோவிட் லாக்டவுன் காலத்தில் கூட, விவசாயிகளை சார்ந்தே நாம் இருந்தோம். விவசாயிகள் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம், நாட்டின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருப்பதையும், விவசாய வளர்ச்சி பொருளாதாரத்திற்கு உதவுவதையும் அவர்கள் உறுதி செய்தனர், ”என்று கூறினார்.
மேலும் அவர் தனது உரையில், ”கிசான் ரின் போர்ட்டலுக்கு தரவு மற்றும் தகவல்களை வழங்குவதில் நாட்டின் அனைத்து வங்கிகளின் முழு ஒத்துழைப்பை உறுதி செய்யுமாறு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதி சேவைகள் துறையின் செயலாளர் விவேக் ஜோஷியிடம் கேட்டுக் கொண்டார்.
தனது அமைச்சகத்தின் கீழ் வரும் துறைக்கு, கிராமப்புற பிராந்திய வங்கிகளை விரைவாக டிஜிட்டல் மயமாக்குவதை உறுதி செய்யவும், கூட்டுறவு வங்கிகளின் கடன் வழங்கலை மேம்படுத்தவும் கோரிக்கை விடுத்தார். மேலும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடன் வழங்கும் விகிதம் உயர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என சீதாராமன் கூறினார்.
“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், நிதியமைச்சரின் பெருந்தன்மையாலும், வேளாண் அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு பல மடங்கு உயர்ந்து ₹1.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது” என்று ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். நிதியமைச்சர் விவசாயிக்களுக்கு கடன் வழங்கும் விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என கூறி உள்ள நிலையில், இனி விவசாயிகள் கடன் பெறுவது எளிதாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் காண்க:
Agromet Bulletin- திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான ஆலோசனை
TNAU-ல் இணைப்பு கல்லூரிகளுக்கான Spot Admission- யாரெல்லாம் தகுதி?