தமிழகத்தை அச்சுறுத்திய நிவர் புயல் அதி தீவிரப் புயலாக உருமாறி, இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுச்சேரிக்கு அருகே மரக்காணத்தில் கரையைக் கடந்தது. அப்போது 140 கிலோ மீட்டர் வேகத்தில், சூறாவளிக் காற்று வீசியதால், மாநிலத்தின் பல மாவட்டங்கள் ஸ்தம்பித்தன.
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. அதிதீவிர புயலாக மாறிய பின்னர் மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.
இதன் காரணமாக சென்னை, கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர்.
கரையைக் கடந்தது ( Cyclone Landfall)
வானிலை மையத்தின் கணிப்புகளை உறுதியாக்கும் வகையில், நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது. அப்போது, புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. அதேநேரத்தில் படிப்படியாக புயல் வலுவிழந்துள்ளது.
புயல் கரையைக் கடந்ததை தொடர்ந்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
-
புதுச்சேரி அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 வரை புயல் கரையை கடந்தது.
-
புயலைத்தொடர்ந்து, தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும்.
-
தீவிரபுயல் அடுத்த சிலமணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறி அதிக கனமழையை தரும்.
-
நிவர் புயல் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
-
அதே நேரம் திருச்சி, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!
தினமும் ரூ.160 செலுத்தி ரூ.23 லட்சத்தை அள்ளுங்கள்- LICயின் Money back Plan!
PM SVANidhi Mobile App மூலம் ரூ.10ஆயிரம் உடனடிக் கடன்-ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம்!