ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது பொதுமக்கள் சிரமப்பட தேவையில்லை.
ஒவ்வொரு முறையும் ரேஷன் கடைகளில் கை ரேகைப் பதிவு சரியாக பதியவில்லை என காலதாமதம் ஆகி வந்த நிலையில், கைரேகை முறையை மாற்ற இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் தங்கள் கைரேகைகளை பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே அதனை பயன்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு வருகிறது.
கண் கருவிழி
நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவுக்கு பதில் இனி கண்கருவிழிகளைக் கொண்டு பதிவு செய்யும் புதிய அறிவிப்பை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறும்போது, ''தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பயனாளர்களின் கண் கருவிழி பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படும். ஏனென்றால், வயல் வெளியில் வேலை பார்ப்பதால் சிலரது கைரேகைகள் கருவியில் சரிவர பதிவாகுவது இல்லை. இதனால் அவர்கள் பொருள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி மூலமாகவே நியாய விலைக் கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். இதைத்தொடர்ந்து இனி தமிழகத்திலும் கண் கருவிழி மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் பயன்பாடு அதிகரிக்கும் பட்சத்தில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கண் கருவிழி மூலம் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்று கூறினார்.
நியாய விலைக் கடை (Ration Shop)
ஸ்மார்ட் கார்டு எனப்படும் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் முழு தகவல்கள் அடங்கிய ஆதார் அட்டையை பதிவு செய்த பின்னர், குறிப்பிட்ட நபர்களின் கண் கருவிழி மூலம் பதிவு செய்யப்பட்டு இனி நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
வயதானவர்களுக்கும் சரிவர ரேகை பதிவாகாமல் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில் தற்போது இந்த புதிய திட்டம் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
ரேஷன் அட்டைதாரர்கள் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!
PM Kisan: ரூ. 2000 இன்று உங்கள் கையில்: மத்திய அரசு அறிவிப்பு!