தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை மிக மோசமாகப் பரவிவருகிறது. நாடு முழுவதும் இதே நிலைமை தான் என்றாலும் பல மாநிலங்களில் இந்த எண்ணிக்கை உச்சத்தை எட்டிவிட்டது என்று ஆய்வாளர்கள் கூறவதோடு, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இம்மாத இறுதியில் தான் உச்சம் அடையும் என்கிறார்கள்.
நேற்றைக்கு மட்டுமே தமிழகத்தில் 28,561 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 39 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது குறிப்பித்தக்கது. இரண்டாவது அலையை ஒப்பிடுகையில் மூன்றாவது அலையில் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளது என்றே கூறலாம்.
கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய உடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த மாத இறுதி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் மட்டும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஜனவரி 9, 16 ஆகிய இரு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்ததது.
இந்த சூழலில் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என்ற கேள்விக்கு வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.
கொரோனா பாதிப்புகள் 28ஆயிரத்தை எட்டியுள்ள போதும் மிகக் குறைவான கட்டுப்பாடுகளே விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலையில் நோயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் மாவட்டங்களுக்குள் செல்ல இ பாஸ் எடுத்து செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அப்போதிருந்த நிலைமை தற்போது இல்லை என்கிறார்கள்.
தற்போது ஓமைக்ரான் பாதிப்பே அதிகளவில் ஏற்படுவதாகவும் மேலும் சோதனை முடிந்து ரிப்போர்ட் வருவதற்குள்ளாகவே குணமாகிவிடுவதாகவும் கூறுகிறார்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இது லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது. பெரும்பாலானோருக்கு மருத்துவ உதவியும் பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. ஒரு வாரக் காலம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டால் பாதிப்பு சரியாகிவிடுகிறது.
இதனால் ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கிற்குத் தளர்வுகளை அறிவிக்க பல மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கர்நாடகாவிலும் இந்த நிலைமை தான். அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தும் போது கடுமையான பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும் படிக்க