கடந்தாண்டுகளை போல், இந்தாண்டு போகி பண்டிகையின் போது காற்று மாசு ஏற்படவில்லை. புகைமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.
காற்றின் தரம் ஆய்வு (Quality of Air)
போகி பண்டிகையின்போது, நச்சு புகையை ஏற்படுத்தக்கூடிய, 'பிளாஸ்டிக், டயர், டியூப்' போன்வற்றை எரிக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நேற்று சென்னையில், 15 இடங்களில் காற்று தரத்தினை கண்காணிக்க, ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்படி, நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல் நேற்று காலை, 8:00 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுக்களின் அளவு, அனுமதிக்கப்பட்ட தர அளவான, 80 மைக்ரோ கிராம், கன மீட்டருக்கு உட்பட்டு இருந்தது.
காற்றில் கலந்துள்ள நுண் துகள்களின் அளவு, 45 மைக்ரோ கிராம் முதல், 91 மைக்ரோ கிராம் வரை இருந்தது.
காற்று தர குறியீடு பொருத்தமட்டில், குறைந்தபட்சமாக தேனாம்பேட்டையில், 61 ஆகவும், அதிகபட்சமாக மாதவரத்தில், 91 ஆகவும் திருப்திகரமான அளவில் இருந்தது. கடந்தாண்டு போகி பண்டிகையின்போது, மூன்று இடங்களில் மோசமாக காற்று தரம் இருந்தது. சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்கள், குப்பையையோ, பிளாஸ்டிக் பொருட்களையோ எரிக்கவில்லை. இதனால், விமான போக்குவரத்து தடைபடவில்லை.
மக்களுக்கு நன்றி (Thanks for Public)
மேலும், சென்னையில் குறைந்த ஈரப்பதம், மிதமான வெப்ப நிலை, மிதமான காற்றின் வேகம் காரணமாக புகை மண்டலம் அதிகமாக தென்படவில்லை. தொலைதுாரத்தை காணும் தன்மை நன்றாக இருந்ததால், விமான புறப்பாடு, வருகை போக்குவரத்தில் இடையூறு ஏற்படவில்லை. இந்த காற்று மாசு குறைய ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கு நன்றி.
மேலும் படிக்க
வீரரோ, காளையோ ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி!