வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டமான கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை போன்ற இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்னும் 2 தினங்களில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பெரும் பாலான இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கரூர், நாமக்கல், கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் இம்மழையானது நீடிக்கும் என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப் போது மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 24-ம் தேதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலில் வலுப்பெற்று தாழ்வு நிலையாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Anitha Jegadeesan
Krishi Jagran