தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை இருக்கிறது. அதேபோன்று தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குமரிக் கடல் பகுதியில் சூறைக் காற்று விச வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் அந்தப் பகுதிக்கு செல்லவேண்டாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 6 செமீ மழையும், புதுச்சேரியில் 4 செமீ மழையும் பதிவாகி உள்ளது. மண்டபம், திருச்செந்தூர், மதுராந்தகம், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகி உள்ளது.