வாடிக்கையாளர்கள் தங்களது ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கணக்கிலிருந்து வணிக ரீதியில் செயல்படும் வங்கிக்கணக்கிற்கு ரூ.2000 க்கும் மேல் பணம் செலுத்தினால் அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கலாம் என தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், தனி நபர் மற்றொரு நபரின் கணக்கிற்கு பணம் அனுப்ப கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என தெளிவான அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPIs) மூலம் செய்யப்படும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000-க்கு மேல் அனுப்பினால் பரிமாற்றக் கட்டணத்தை இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) பரிந்துரைத்துள்ளது. அந்த வகையில் எரிபொருளுக்கு 0.5%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் போன்றவற்றுக்கு 0.7%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%, Mutual Fund, அரசு, காப்பீடு மற்றும் ரயில்வே துறைக்கு 1% ஆக கட்டணம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
UPI பரிவர்த்தனைகளினால் வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குநர்களுக்கு வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் பரிமாற்ற விலையானது செப்டம்பர் 30, 2023-க்குள் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPI தற்போது இந்தியாவில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் கட்டண முறை ஆகும், இது பயனர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தி உடனடியாக வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணத்தை பரிமாற்ற அனுமதிக்கிறது. மறுபுறம், பிபிஐக்கள் டிஜிட்டல் பணப்பைகள் போன்றது. அதன்மூலம் பயனர்கள் பணத்தைச் சேமித்து மற்றொரு வங்கிக்கு பணம் செலுத்த அனுமதிக்கின்றன. இந்தியாவில் முன்னணியில் உள்ள UPI செயலிகள் paytm, PhonePe மற்றும் Google Pay ஆகும்.
பரிமாற்றக் கட்டணம் என்பது பரிவர்த்தனையைச் செயலாக்குவதற்கு ஒரு வங்கியால் மற்றொரு வங்கிக்கு விதிக்கப்படும் கட்டணமாகும். இனிமேல் UPI செயலிகள் மூலம் ரூ.2000 க்கு மேல் பணம் பரிமாறினால் கட்டணம் வசூலிக்கப்படும் என தவறான தகவல்கள் பரவிய நிலையில் தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) விளக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு-
அறிமுகப்படுத்தப்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணம் மொபைல் வாலட்கள் போன்ற ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகளைப் (PPIs) பயன்படுத்தி ரூ.2,000க்கு மேல் பணம் செலுத்தும் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெளிவுப்படுத்த விரும்புகிறோம். தனிநபர்களுக்கு இடையேயான பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
NPCI இன் கூற்றுப்படி, முன்மொழியப்பட்ட பரிமாற்றக் கட்டணம் சந்தை உள்கட்டமைப்புகள் மற்றும் உலக வங்கியின் பரிந்துரைகளுக்கு ஏற்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தவறான தகவல்களை இணையத்தில் பரவிய நிலையில் paytm சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
காளான் சாகுபடிக்கான அரசின் பிராண்ட் அம்பாசிடர்- மஸ்ரூம் லேடியின் வெற்றிக்கதை