ஒடிசா மாநிலம் பாலசோரில் ஏற்பட்ட இரயில் விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு ரயில் மூலம் விபத்தில் உயிர்தப்பிய 137 பேர் சென்னைக்கு இன்று அதிகாலை வந்தனர்.
ஒடிசா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளைச் செய்திடவும், உயிரிழந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் குடும்பத்தினருக்கு உதவிடவும் முதலமைச்சர் உத்தரவின் பேரில், மீட்புக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்தில் நடந்து வரும் மீட்புப் பணிகளைக் கவனித்து வருகின்றனர்.
மற்றொரு குழுவான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், இ.ஆ.ப., ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில், இரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் விபரங்களை சேகரித்தும், மீட்புப் பணிகளுக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியும் வருகின்றனர்.
137 பயணிகள் சென்னை வருகை:
இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஒடிசாவிலிருந்து சிறப்பு இரயில் மூலம் 137 பயணிகள் சென்னை வருகை தந்தனர். இவர்களை இரயில் நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய் நிர்வாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. ஆகியோர் வரவேற்றனர். இன்று காலை வருகை தந்த பயணிகளுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
இவர்களில் 36 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 34 பயணிகள் இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனுப்பி வைக்கப்பட்ட நபர்களில் 3 பயணிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகள் சிறு சிகிச்சைக்குப் பிறகு அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிறப்பு போக்குவரத்து வசதி ஏற்பாடு:
முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஒடிசா மாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வந்தடைகின்ற பயணிகளுக்கு தேவையான பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சை மேற்கொள்ள 30 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிக்கென அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 7 பேருந்துகளும், காவல் துறை மூலம் 50 டாக்ஸிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக 10 அவசரகால ஊர்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரயில் நிலையத்தில் வீல் சேர், ஸ்டிரெச்சர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள், வருகின்ற பயணிகளுக்குத் தேவையான உதவிகள் செய்திட பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
pic courtesy: TNDIPR
மேலும் காண்க:
ஒடிசா இரயில் விபத்து- தமிழகம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிப்பு