மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்களை, 400 டிகிரி செல்சியசில் உருக்கி, ஆயில் தயாரித்து, குப்பை கையாள்வதில், மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல்லாவரம் கன்டோன்மென்ட் நிர்வாகம் முன்மாதிரியாக உள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில், தினசரி சேகரமாகும் குப்பையை முறையாக கையாளாததால், பல குப்பை கிடங்குகள் உருவானதோடு, பல நீர்நிலைகளும் நாசமாயின. எத்தனை திட்டங்கள் வந்தாலும், அவற்றை முறையாக செயல்படுத்தாத அதிகாரிகள் இருக்கும் வரை, திடக்கழிவு மேலாண்மை என்பது இன்னமும் பெயரளவு நடவடிக்கை மட்டுமே.
பிளாஸ்டிக் (Plastic)
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்துள்ள போதிலும், அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. இந்த நிலையில், தினமும் சேகரமாகும் குப்பையில், மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி, அதன் மூலம் ஆயில் தயாரிக்கும் பணியில் பல்லாவரம் - பரங்கிமலை கன்டோன்மென்ட் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.இரண்டரை மாதங்களாக, இத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதால், மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்களை, இனி உடனுக்குடன் கையாளும் தீர்வு கிடைத்துள்ளது.
மாநகராட்சிக்கு முன்மாதிரி (A model for the Corporation)
தாம்பரம் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பணி, முழுக்க முழுக்க பெயரளவிலேயே நடக்கிறது. இதனால், கன்னடப்பாளையம், பல்லாவரம்- - துரைப்பாக்கம் சாலை, மாடம்பாக்கம், திருநீர்மலை, பம்மல் போன்ற பகுதிகளில், குப்பை கிடங்குகள் உருவாகியுள்ளன. கன்டோன்மென்ட் நிர்வாகம் போன்று, தாம்பரம் மாநகராட்சியிலும், மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி, ஆயில் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இதன் மூலம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தீர்வு கிடைப்பதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. மாநகராட்சிநிர்வாகம் இது பற்றி சிந்திக்குமா?
'பிளான்ட்' (Plant)
பிளாஸ்டிக் பொருட்களை தனித்தனியாக பிரித்து, 'அக்லோ' இயந்திரம் மூலம் சிறிய துகள்களாக அரைப்பர். பின், அரைத்த பிளாஸ்டிக்கை எடுத்து, 1,500 கிலோ கொள்ளளவு உடைய பாய்லரில் கொட்டுவர். அதன் கீழே விறகு வைத்து எரிப்பர். 400 - 450 டிகிரி செல்சியசில், பிளாஸ்டிக் உருகி, ஒரு வித நச்சுத்தன்மை புகையாக உருமாறும்.
பின், அது, இரண்டு 'லேயர்'கள் வழியாக செல்லும்போது, வாயுவாகவும், நீராவியாகவும் மாறி, இறுதியில் ஆயிலாக மாறி வெளியே வரும். அப்படி வரும் போது, லேயரில் எஞ்சியுள்ள நீராவி மீண்டும் 'கேஸா'க மாறி, பாய்லருக்கு சென்று, பிளாஸ்டிக்கை உருக்கும் எரிபொருளாக பயன்படும்.
விற்பனை (Sales)
பரங்கிமலை கன்டோன்மென்ட் கழகத்தில் இருந்து, தினமும், 6,000 கிலோ குப்பை, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னடப்பாளையம் கிடங்கில் கொட்டப்படுகிறது. கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு சொந்தமான வாகனம், குப்பையை எடுத்து செல்கிறது. இதற்காக, மாநகராட்சி நிர்வாகத்திற்கு மாதந்தோறும், 1,000 கிலோ குப்பைக்கு 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தப்படுகிறது.
ஆயில் லிட்டர் ரூ.50
பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆயில், இரும்பு கம்பிகளை உருக்க எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. உலோகம் சம்பந்தப்பட்ட அனைத்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் இது பயன்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆயிலை, ஏஜன்ட்டுகள் நேரிடையாக வந்து வாங்கி செல்கின்றனர். 1 லிட்டர் ஆயில், 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது
ஏர்போர்ட்டில் 8,000 கிலோ
சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் மற்றும் அலுவலகங்களில் தேங்கும் பிளாஸ்டிக், அலுமினியம், உணவு பொருட்களை பார்சல் செய்யும் பொருட்கள், டீ கப், கை துடைக்கும் பேப்பர் உள்ளிட்ட குப்பை கழிவுகளை, கன்டோன்மென்ட் ஊழியர்கள் சேகரித்து, தரம் பிரிக்கின்றனர். இங்கு, 22 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். விமான நிலையத்தில் இருந்து, தினமும் 8,000 கிலோ குப்பை சேகரமாகிறது. அந்த குப்பையும் ஆயில் தயாரிக்கும் பிளான்ட்டுக்கு அனுப்பப்படுகிறது.
மேலும் படிக்க
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு நவீன கருவி: கோவை இரயில் நிலையத்தில் அறிமுகம்!