இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து ஓலா நிறுவனமும் புதிது புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99,999 ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 141 கிலோ மீட்டர் வரை பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், போர்ட்ஸ் மோடில் கூட 90 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடியது.
தற்போது, நிறுவனத்தின் தயாரிப்புகளான Ola S1 மற்றும் S1 Pro ஆகியவை இந்தியாவில் மிகவும் மேம்பட்ட ஸ்கூட்டர்களாகவும், MoveOS அம்சங்களுடன் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது மியூசிக் பிளேபேக், நேவிகேஷன், துணை பயன்பாடு, ரிவர்ஸ் மோட் போன்ற மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் உள்நாட்டு மின்சார வாகன தயாரிப்பாளரான ஓலா நிறுவனம் தீபாவளிக்கு முன்னதாக இந்தியாவில் ரூ.80,000க்குள் புதிய மலிவு விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அக்டோபர் 22 ஆம் தேதி ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோவை விட மலிவு விலை ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நிறுவனம் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் வரையிலான ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோவை விற்பனை செய்து வருகிறது.
ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "இந்த ஆண்டு, 'தீபங்களின் திருவிழா' அன்று, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் புதிய புரட்சியை ஒளிரவிட உள்ளது. இதில் எங்களுடன் கைகோர்க்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். எங்களுடைய “மெகா மெய்நிகர் நிகழ்வு - ஓலா தீபாவளி 2022” மூலமாக ஆன்லைனில் புதிய வாகனங்களின் அறிமுகங்களைக் காணலாம். மிகப்பெரிய ஆச்சர்யங்கள் மற்றும் புத்தம் புதிய தயாரிப்புகளை காணலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
ஓலா நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ஸ்கூட்டர்கள் விலை மலிவாக இருந்தாலும், Ola S1 மற்றும் Ola S1 Pro போன்ற வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரிவர்ஸ் மோட், கனெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன் போன்ற அம்சங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: