அரசு சார்பில் முதியோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை பெறுவதில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், தகுதியற்ற நபர்கள் பயன் அடைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில், 4,180 பேர் முறைகேடில் ஈடுபட்டது அம்பலமானது. தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பயனாளிகள் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
முதியோர் உதவித்தொகை (Old Age Grant)
தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளின் பட்டியலில், முதியோர் உதவித்தொகையும் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில், உறவினர்கள் உட்பட எவரின் ஆதரவும் இன்றி தனித்து வாழும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இவ்வகை பயனாளிகளுக்கு, உறவினர்களின் ஆதரவு மட்டுமின்றி, சொந்த வீடு, இரண்டு சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு, வங்கியில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பு, 5 சவரனுக்கு மேல் நகை இருக்கக் கூடாது என, பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
முறைகேடு (Scam)
மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, உதவித்தொகை பெற விண்ணப்பிப்போரின் உண்மை தன்மை குறித்து, அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தகுதியுடைய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிப்பர். அந்த வகையில், மாநிலம் முழுதும், முதியோர் உதவித்தொகை பெறுவதில் முறைகேடு நடப்பதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 60 ஆயிரத்து 500 பேர் முதியோர் உதவித்தொகை பெறுகின்றனர். இவர்களில் சிலர், நல்ல வசதியுடன் வாழ்வதாகவும், போலி ஆவணங்கள் சமர்ப்பித்து முறைகேடான வகையில் உதவித்தொகை பெறுவது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
தகுதி நீக்கம் (Disqualified)
இதையடுத்து, அரசு அதிகாரிகள், அந்தந்த தாலுகா, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வாயிலாக, பயனாளிகளின் வீடு தேடிச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்தனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,810 பேர் முறைகேடான வகையில் உதவித்தொகை பெறுவது அம்பலமானது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை தொடர்ந்து, மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும், அரசு அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 1.84 லட்சம் பேர்
சென்னையில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளி உள்ளிட்ட திட்டங்களில், 1.95 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலனடைந்து வந்தனர். இவர்களில் சிலர், முறைகேடான ஆவணங்கள் சமர்ப்பித்து, உதவித்தொகை பெறுவதாக புகார் எழுந்ததை அடுத்து, அதிகாரிகள் கள ஆய்வு நடத்தினர்.
அதில், முறைகேடில் ஈடுபட்டவர்களுக்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், போலி பயனாளிகள் நீக்கப்பட்டு, சென்னையில் தற்போது பல்வேறு திட்டங்களின் கீழ், 1.84 லட்சம் பேர் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க
இனி இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவது கஷ்டம்: ஏன் தெரியுமா?
Post Office: மாதந்தோறும் வருமானம் கிடைக்க சிறப்பான அஞ்சலக திட்டம்!