பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தால், எதிர்கால வரி செலுத்துவோருக்கு சுமை அதிகரிக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்துள்ளார்.
2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இதில் அரசு ஊழியர்களுக்கு நிலையான பென்சன், மருத்துவப் படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைத்து வந்தன.
தேசிய பென்சன் திட்டம் (National Pension Scheme)
2004ஆம் ஆண்டு முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தேசிய பென்சன் திட்டம் (National Pension System) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பென்சனுக்கான உத்தரவாதமும் இல்லை, இதர சலுகைகளும் இல்லை என அரசு ஊழியர்கள் புகார் கூறுகின்றனர்.
பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் அண்மையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியும் உள்ளன.
தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதுகுறித்து இன்னும் எந்தவொரு அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. எனினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பெரும் சுமை
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால், எதிர்கால சந்ததியினர், அதாவது எதிர்கால வரி செலுத்துவோருக்கு கடும் சுமை ஏற்படும் எனவும், இந்தியா நிதி ஒழுங்கிலும், நிலையான வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மத்திய அரசுக்கான ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்துள்ளார்.
சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாகவும், இந்த நடவடிக்கை தற்போதைய வரி செலுத்துவோரை அல்லாமல் எதிர்கால வரி செலுத்துவோரை பாதிக்கும் எனவும் சுமன் பெரி தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடி
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் அரசுகளுக்கு ஏற்படும் நிதி சுமை குறித்து ஏற்கெனவே நிதி ஆயோக் ஆய்வு நடத்தி வந்தது. இந்நிலையில், பழைய பென்சன் திட்டத்தால் எதிர்கால சந்ததியினருக்கு நிதி சுமை அதிகரிக்கும் என நிதி ஆயோக் துணை தலைவர் சுமன் பெரி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
7th Pay Commission: விரைவில் சம்பள உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு!
பென்சன் தொகையை சேமிக்க நினைப்பவரா நீங்கள்? தங்க முதலீடு தான் பெஸ்ட்!