தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, அந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து வைரஸ் தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு ஒமிக்ரான் பரவி உள்ளது.
அதிவேகமாகப் பரவும் (Spread rapidly)
மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால், ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளிலும் ஒமிக்ரான் பரவியதையடுத்து, இந்தியாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் பாதிப்பு (Impact in Kerala)
ஏற்கனவே தமிழகத்தையொட்டிய அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கேரளாவிலும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து கேரள மாநிலம், கொச்சி வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதுக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார்.
அவருடன் வந்த தாய் மற்றும் மனைவி ஆகியோருக்கும் கொரோனாப் பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், அவர்களுடன் விமானத்தில் வந்த 149 பேருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா சார்ஜ், மக்கள் இதனால் பீதியடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
38 ஆக உயர்வு (Rise to 38)
இதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக முதன்முதலாக ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 18 பேர் ஒமிக்ரான் வைரஸூக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜஸ்தானில் 9 பேரும், கர்நாடகாவில் 6 பேரும், டெல்லியில் 2 பேரும் ஒமிக்ரானுக்காக சிகிச்சை பெறுகின்றனர். ஆந்திரா மற்றும் சண்டிகரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அச்சம் வேண்டாம் (Do not be afraid)
தமிழகத்தை ஒட்டியுள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எல்லைப்பகுதியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கும் ஒமிக்ரான் வந்துவிடுமோ என மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும், தமிழக அரசு பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க...
புதிய வகை வைரஸ் பரவல்: கவனமாக இருங்கள்! அரசு அறிவுரை!
தடுப்பூசிக்கு கட்டுபடாத புதிய வகை வைரஸ் ''ஒமிக்ரான்'': உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!