புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மத்திய அரசு தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகக் கொள்கை
முந்தைய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2020ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. கொரோனா நெருக்கடி காலம் என்பதால் முந்தைய கொள்கையே நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் அடுத்த வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை வெளியாகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளை கருத்தில் கொண்டு இந்த கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன் இந்த கொள்கை தயார் செய்யப்பட்டுள்ளது. புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
- ஒரு மாவட்டம் ஒரு பொருள் (One District One Product). ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு பொருளில் கவனம் செலுத்தப்படும்.
- புதிய மின்னணு வர்த்தக மையங்களும், ஏற்றுமதி மையங்களும் உருவாக்கப்படும்.
- ஏற்றுமதியில் போட்டித்தன்மையையும், தரத்தையும் ஊக்குவிக்க சலுகைகள்.
- தனி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்படும்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) மேம்படுத்தப்பட்டு தொழில் மற்றும் சேவை வளர்ச்சி மையங்களாக மாற்றப்படும்.
ஒரு மாவட்டம் ஒரு பொருள் (One District One Product)
ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் முதற்கட்டத்துக்கு 2200 கோடி முதல் 2500 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும். இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தயார் செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் எல்லா மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும். இதற்காக வர்த்தக அமைச்சகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதி மேம்பாட்டு குழுவை அமைக்கிறது. இத்திட்டத்துக்கு தேவையான உள்கட்டமைப்பை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்றுமதி பொருட்கள் பற்றிய முழு பட்டியலும் தயாராகிவிட்டதாம்.
வர்த்தக ஒப்பந்தங்கள்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களால் (FTA) உள்நாட்டு தொழில்கள் பயன்பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME) பெரிதும் பயன்பெற முடியும். இந்தியா - இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் இம்மாதம் கையெழுத்தாக இருக்கிறது. தீபாவளிக்குள் கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
மேலும் படிக்க
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: மூன்றாவது ரயில் இந்த மாதத்தில் தொடக்கம்!