அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" என்னும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுக படுத்தியது. ஜூன் மாதத்தில் அறிமுகப் படுத்திய திட்டமானது, வெளியூர்களில் வசிப்பவர்களுக்கு அதிக பயன் தரும் என கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இத்திட்டம் குறித்த தகவலை வெளியிட்டார். வரும் ஜூன் 1, 2020 முதல் நாடு முழுவதும் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
மின்னணு பிஓஎஸ் Point of Sale (POS) சாதனங்களில் ஆதார் எண் இணைக்கப்பட்ட பின்பு பயனாளிகள் இத் திட்டத்தினை உபயோகித்து கொள்ளலாம். தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களில் வசிக்கும் நுகர்வோர்கள் அவர்களின் அட்டைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உணவுப் பொருள்களை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அருகில் உள்ள நியாய விலைக் கடையிலும் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும். பயோமெட்ரிக் அல்லது ஆதார் மூலம் பயனாளிகளை அடையாளம் கண்டறிந்து பொருட்கள் வழங்கப்படும்.