தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 81.35 கோடி ஏழை எளிய மக்களுக்கு ஓராண்டுக்கு இலவச ரேஷன் வழங்க, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதந்தோறும் நபர் ஒருவருக்கு, 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதில், அரிசி கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும் அளிக்கப்படுகின்றன.
இலவச ரேஷன் (Free Ration)
கொரோனா பரவலுக்கு பின் கொண்டுவரப்பட்ட 'பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ், கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்கள் ரேஷன் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவு தானியங்களுக்கான செலவில், 90 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. மீதியுள்ள 10 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்குகின்றன. ஆனால் அதற்கான நற்பெயருக்கு மாநில அரசுகள் உரிமை கொண்டாடி வருவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு கூடுதலாக வழங்கப்படும் இலவச ரேஷனை, வரும் 31ம் தேதிக்கு மேல் நீட்டிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அதே நேரம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 81.35 கோடி ஏழை எளிய மக்களுக்கு ஓராண்டுக்கு இலவச ரேஷன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
'இதன் வாயிலாக, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்' என, மத்திய உணவுத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். இதன் வாயிலாக, ரேஷன் உணவு திட்டத்திற்கான நற்பெயரை மாநில அரசுகள் இனி சொந்தம் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை: புத்தாண்டில் கிடைக்கப் போகுது!