மைசூருவில் இருந்து வெங்காய வரத்து குறைந்துள்ளதால், மதுரை மற்றும் திருச்சியில் உள்ள மொத்த சந்தைகளில், காய்கறிகளின் விலை கடந்த 10 நாட்களில், இருமடங்காக உயர்ந்துள்ளது.
இதனால் வெங்காயத்தின் விலையானது கிலோவுக்கு, 160 ரூபாயாக உயர்ந்துள்ளது. அண்டை மாநிலங்களில் பருவமழை அதிகரித்து வருவதால், கடந்த வாரங்களில் தமிழகத்தில் காய்கறி சந்தைகளுக்கு வரத்து கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் தக்காளி, மிளகாய் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் தற்போது வரை இன்னும் கிலோ ரூ.100-க்கு குறையவில்லை. இதனைத் தொடர்ந்து இஞ்சி, பீன்ஸ் போன்ற காய்கறிகளும் தற்போது 'செஞ்சுரி' அடித்துள்ளன. கடந்த மாதம் தான் சில குறிப்பிட்ட காய்கறிகளின் விலை திடீரென்று உயரத்தொடங்கினாலும், ஆண்டின் தொடக்க முதலே தேவை அதிகரிப்பின் காரணமாக கடந்த பல மாதங்களாக வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ. 50-க்கு மேல் தான் விற்பனையாகி வந்தது.
ஜூன் மாதம் முழுவதும் வெங்காயம் கிலோ ரூ.80-க்கு மேல் விலை போனதாக மதுரை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஒரு வாரத்தில், ரூ.140 முதல் ரூ.160 வரை உயர்ந்துள்ளது.
மதுரை மத்திய மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் என்.சின்னமாயன், முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறியதாவது: ”பாசன பிரச்னையால், கடந்த சீசனில் உள்ளூர் சாகுபடி பாதிக்கப்பட்டு, திண்டுக்கல் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள சாகுபடியாளர்களை மட்டுமே நம்பியிருந்தோம். இந்த வாரம், போதுமானளவு இருப்பு உள்ளது. தற்போது வெங்காயமானது மைசூரு மற்றும் திண்டுக்கல்லில் இருந்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
அறுவடை காலம் தொடங்கும் அடுத்த 10 நாட்களில் சின்ன வெங்காயம் விலை குறையும் என நம்பிக்கை தெரிவித்தார் மதுரையைச் சேர்ந்த வியாபாரி தங்கராஜ். தமிழ் மாதமான ஆடி தொடங்குவதால் நிம்மதி கிடைக்கும் என்றார்.
மேலும், வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய காய்கறிகள். சின்ன வெங்காயத்தின் வருகை அதிகரிக்க தொடங்கினால் பெரிய வெங்காயத்திற்கு பதிலாக தற்போது சிறு வெங்காயத்தை வாங்கி சமையலுக்கு பயன்படுத்த இயலும். அதனால் பெரிய அளவில் பொதுமக்களுக்கு சிரமம் இருக்காது என்றார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றைய தினம் கிலோ ₹120-க்கு விற்பனையான முதல் ரக தக்காளி, இன்று ₹10 உயர்ந்து, ₹130-க்கு விற்பனையாகிறது. சிறிய தக்காளி கிலோ ₹100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியின் விலை குறைவுக்கு வராத நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையிலுள்ள மூன்று மண்டலங்களில் முதற்கட்டமாக நியாயவிலைக் கடைகளின் மூலம் தக்காளியானது கிலோவுக்கு ரூ.60 என்கிற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: india TV
மேலும் காண்க:
மகளிர் உரிமைத் தொகை- கூட்டுக்குடும்பமாக வாழும் பெண்கள் அதிர்ச்சி