News

Wednesday, 29 September 2021 08:19 PM , by: R. Balakrishnan

Online registration system

அக்.1-ம் தேதி முதல் நெல் விற்பனை செய்ய வேண்டுமானால் விவசாயிகள் முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நெல் பயிரிடும் விவசாயிகள், மகசூலான நெல்லை அறுவடை செய்யும் முன்பாக அதனை ஆன்லைனில் பதிவு செய்தபின், கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மைத் துறையினர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஒப்புதல் வழங்கிய பின்னர்தான் நெல்லைக் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற புதிய நடைமுறை வரும் அக்.1 -ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

ஆன்லைனில் பதிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப். 29) அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 'நெல் கொள்முதலுக்கு முன் எவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்வது' என்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு வந்தவர்களைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளர் முத்தையா வரவேற்றார். இதையடுத்து, விவசாயிகள் அறுவடை செய்யும் முன்பாகப் பதிவு செய்ய வேண்டிய நடைமுறைகளும், கிராம நிர்வாக அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

விவசாயிகள் எதிர்ப்பு 

விவசாயிகள் நெடார் வி.தருமராஜன், ராயமுண்டான்பட்டி வெ.ஜீவக்குமார், பாச்சூர் ஆர்.பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில், "சிறு, குறு விவசாயிகள் இன்னும் பலர் ஆண்ட்ராய்டு போன் (Android Mobile) இல்லாமல் உள்ளனர். இவர்கள் எப்படி ஆன்லைனில் பதிவு செய்ய முடியும்? பதிவு செய்தபின், விஏஓ, வேளாண்மைத் துறையினர் கள ஆய்வு செய்த பின்னர்தான் அறுவடை (Harvest) செய்ய வேண்டும். மழை போன்ற இடர்ப்பாடுகள் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

எவ்வளவு மகசூல் கிடைக்கும் என்பதை எப்படி முன்கூட்டியே கணக்கிட முடியும்? அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்தால் அவர்களுக்கும் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் அறுவடைக் காலம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

அதேபோல், அறுவடை செய்த நெல்லைக் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு வந்து குவிப்பதைத் தடுக்கத்தான் இந்த நடைமுறை என நாங்கள் பார்க்கிறோம். இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. வியாபாரிகள் பயனடையத்தான் இந்தப் புதிய நடைமுறை வழிவகுக்கும். எனவே, இந்தப் புதிய நடைமுறையை அமல்படுத்தக் கூடாது. எங்களது கருத்துகளை நீங்கள் கேட்காமல் எப்படி அக்.1 முதல் இந்த முறையில் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறுவீர்கள், எனவே, பழைய முறையிலேயே கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும், கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெறவே அலைய வேண்டியுள்ளது. பல நேரங்களில் சர்வர் குளறுபடி என அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால், விவசாயிகளுக்கும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் (VAO) இடையே மோதல் போக்குதான் அதிகரிக்கும்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமாக இந்தத் திட்டத்தின் மூலம் கொண்டு வருவதாகத் தெரிகிறது. எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்" என விவசாயிகள் தெரிவித்தனர்.

Also Read | காய்கறி உரத்தில் கலப்படம்: கவலையில் விவசாயிகள்!

கொள்முதல்

பின்னர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் என்.உமா மகேஸ்வரி பேசுகையில், "விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்காமல் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நாளில் நெல்லைக் கொண்டு வந்தால் உடனடியாகக் கொள்முதல் செய்யலாம். இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டாமல் வியாபாரிகள் நெல் மாவட்டம் விட்டு மாவட்டம் வருவது முற்றிலும் தடுக்கப்படும். அந்தந்த கிராமப் பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதால், விவசாயிகள் அலைய வேண்டியிருக்காது.

அதேபோல், அறுவடை தொடங்குவதற்கு முன்பாக, முன்கூட்டியே விவசாயிகள் பதிவு செய்யும்போது, அந்தப் பகுதியில் கொள்முதலுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்" என்றார்.

பயிற்சிக் கூட்டத்தில் பங்கேற்ற விஏஓக்கள் பலரும் கூறுகையில், "தற்போது காலியிடங்கள் அதிகமாக இருப்பதால் இரண்டு, மூன்று வருவாய் கிராமங்களை கூடுதலாகப் பொறுப்பேற்றுப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். தற்போதுள்ள நடைமுறையில் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை வழங்கி நெல் கொள்முதலுக்கு விவசாயிகளுக்கு உதவுகிறோம்.

ஆனால், ஆன்லைனில் (Online) பதிவு செய்யும்போது, விவசாயிகள் பதிவு செய்த உடன் கள ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால், கால விரயம் ஏற்படும். இணையதளக் குளறுபடி என்றால் எங்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையேதான் தகராறு ஏற்படும். எங்களது சிரமங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க

சம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்!

பருவநிலை மாற்றத்தால் பயிர்களுக்கு பாதிப்பு: பிரதமர் மோடி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)