1.ரேஷன் கடைகளில் ஆன்லைன் பணபரிவர்தனை
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ள தகவல் ரேஷன் கடை பயனர்களை அதிகம் கவர்ந்துள்ளது. அதாவது இனி தமிழக ரேஷன் கடைகளில் PhonePe, GPay, Paytm போன்ற UPI பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அதிகம் ஆன்லைன் பணபரிவர்தனைகளை மட்டுமே பயன்படுத்தி வருவதால், இந்த அறிவிப்பு மக்களை குஷியாக்கி உள்ளது.
2.ரூ.30 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது. இந்த நாட்டு சர்க்கரையை பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தது.
3.ரூ. 46 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில், சேலம், நாமக்கல் மற்றும் அண்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 1,950 பருத்தி மூட்டைகள் 350 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 46 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
4.2050-க்குள் கார்பன் இல்லாத மாவட்டமாக கோவை மாறும்- அமைச்சர் நம்பிக்கை
தமிழ்நாடு கிரீன் க்ளைமேட் கம்பெனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய ”கார்பன் நியூட்ரல் கோயம்புத்தூர் பயிலரங்கம்” நிகழ்வினை சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். கோவை மாவட்டம் 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் இல்லாத மாவட்டமாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உடனிருந்தார்.
5.தக்காளி கிலோ ரூ.1 க்கு கொள்முதல்
இந்த ஆண்டு உற்பத்தி அதிகரித்ததால் தக்காளி வரத்தும் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.100 முதல் ரூ.200 வரை தான் விலை போனது. அதே நேரத்தில் ஒரு கிலோ தக்காளி சில்லரை விலையில் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது , ஒரு கிலோ ரூ.1 முதல் ரூ.2 வரைதான் கொள்முதல் செய்ய முடிகிறது. வண்டி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி எல்லாம் சேர்த்து ரூ.8-க்கு விற்கிறார்கள். ஆனாலும் வாங்குவதற்கு ஆள் இல்லாததால் அவை தேக்கம் அடைந்துள்ளன. தற்போது ஆங்காங்கே மழை பெய்வதால் தக்காளி வரத்து விரைவில் குறைந்து விலை உயரும், என்று தெரிவித்துள்ளனர்.
6.பழைய மீட்டர்களை விவசாய மாற்று குடிசை இணைப்புகளுக்கு வழங்க அரசு திட்டம்
மீட்டர் பதிக்காமல் எந்தப் பிரிவிலும் மின் இணைப்பு வழங்கக் கூடாது என்றும், ஏற்கனவே இணைப்பு வழங்கப்பட்டிருந்தால் உடனடியாக மீட்டர் பொருத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பலமுறை அறிவுறுத்தி வருகிறது. மீதமுள்ள இணைப்புகள் அளவிடப்படவில்லை. ஆனால் இனிமேல், இலவச மின்சாரத்தை ஒவ்வொரு மாதமும் துல்லியமாகக் கணக்கிட்டு, மானியத் தொகையை மட்டும் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்துக்கு மீட்டர் பொருத்த இன்னும் 30 லட்சம் மீட்டர் தேவைப்படுகிறது. அதற்கான தொகை மின் வாரியத்திடம் இல்லை. எனவே, வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடப்பதால், அங்குள்ள பழைய மீட்டர்களை விவசாய மாற்று குடிசை இணைப்புகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க
அரிசி, சீனி உட்பட 4 ரேஷன் பொருட்களை பாக்கெட்களில் வழங்க அரசு முடிவு!
TN கூட்டுறவு வங்கிகளால் விவசாயிகளுக்கு வழங்கிய கடன் எவ்வளவு? தள்ளுபடி எவ்வளவு?