தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகளில், நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையைச் சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடுதல் போன்ற போட்டிகளில், நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
உத்தரவு
மனுவை விசாரித்த, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழக மக்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாப்பதில், ஜல்லிக்கட்டு (Jallikattu) விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டு இன மாடுகள் இருப்பதை ஜல்லிக்கட்டு உறுதி செய்கிறது. தமிழக அரசு ஏற்படுத்திய திருத்த சட்டத்தில், ஜல்லிக்கட்டு விளையாட்டில், நாட்டு இன மாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவரிடம் சான்றிதழ்
நாட்டு இன மாடுகள் பற்றியே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைப்பதும் தான், சட்டத்தின் நோக்கம். கலப்பின மாடுகள், இறக்குமதி மாடுகள் இதில் வராது. நாட்டு இன மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும்; வெளிநாட்டு மாடுகளுக்கு இருக்காது. அவை, ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தகுதி இல்லை. எனவே, ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை அனுமதிக்கக் கூடாது.
நாட்டு இன மாடுகள் தான், ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கிறது என்று கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் (Certificate) பெற வேண்டும். நாட்டு இன மாடுகளை ஊக்குவிக்கும் விதமாக, விவசாயிகளுக்கு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு மானியம் (Subsidy), ஊக்க தொகையை அரசு வழங்க வேண்டும். செயற்கை முறை கருத்தரிப்பை, முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். இது, விலங்குகளுக்கான இயற்கையான உறவு உரிமையை மறுப்பது போலாகும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க
காலநிலை மாற்றத்தால் மதுரைக்கு பாதிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
தமிழகத்திற்கு 30.6 TMC நீரை உடனே திறக்க உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம்