ஒமைக்ரான் வைரசின் மரபணு மாறிய இரண்டு வகை வைரஸ்கள், புதிய அலைக்கு வழிவகுக்ககூடும் என, தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவில் கடந்தாண்டு உருவான ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதனால் உலகம் முழுதும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன்பின், ஒமைக்ரானின் மரபணு மாறிய புதிய வகை வைரஸ்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன.
புதிய அலை (New Wave)
கடந்த மாதம் ஒமைக்ரானில் இருந்து பி.ஏ., 4 மற்றும் பி.ஏ., 5 என்ற இரண்டு வைரஸ்கள் உருவாகி உள்ளதாகவும், அவற்றை கண்காணித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்தது. இந்நிலையில் அந்த வகை வைரஸ்கள் குறித்து தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்று நடத்தி உள்ளனர். அதற்காக ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த, 39 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் எட்டு பேர், 'பைசர்' தடுப்பூசியையும், ஏழு பேர், 'ஜான்சன் அண்ட் ஜான்சன்' தடுப்பூசியையும் செலுத்தி உள்ளனர்; மீதமுள்ள 24 பேர், எந்த தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளவில்லை.
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, கொரோனா வைரசில் இருந்து, ஐந்து மடங்கு அதிக பாதுகாப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்களுக்கு, பி.ஏ., 4 மற்றும் பி.ஏ., 5 வகை வைரஸ்களுக்கு எதிரான, 'ஆன்டிபாடி' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி, மூன்று மடங்கு குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு, எட்டு மடங்கு குறைவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை வைரஸ்கள், கொரோனாவின் புதிய அலைக்கு வழிவகுக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆதலால், முகக் கவசம் அணிந்து கொண்டு இருப்பது தான் நலம் பயக்கும்.
மேலும் படிக்க
தடுப்பூசி செலுத்தியதில், உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணம்: பிரதமர் மோடி பெருமிதம்!
கொரோனா கால பொருளாதார இழப்பு: சரிசெய்ய இத்தனை ஆண்டுகள் ஆகலாம்!