தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்துள்ள நிலையில் அநேக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை அடுத்த சில தினங்களுக்கும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக வேளாங்கண்ணி பகுதியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 15 ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16 ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17 ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு விவரம் பின்வருமாறு-
14.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
15.11.2023: கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17.11.2023 முதல் 20.11.2023; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வானிலை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை காணவும்.
இதையும் காண்க:
தமிழகத்தை மிரளவிடும் கனமழை: பள்ளி- ஆட்சியாளர்களுக்கு பறக்கும் உத்தரவு