News

Tuesday, 06 July 2021 10:42 AM , by: R. Balakrishnan

Credit : Dinamalar

புதிதாக மின் இணைப்பு கோரும் விண்ணப்பதாரர்கள், ஆர்.சி.டி., என்ற, உயிர் காக்கும் சாதனத்தை கட்டடத்தில் பொருத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு (Electricity) வழங்கப்பட மாட்டாது என, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

உயிர் காக்கும் சாதனம்

வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள்,பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் உபயோகத்திற்கான ஒருமுனை, மும்முனை மின் இணைப்புகளிலும் (Three Phase Electricity) தற்காலிக மின் இணைப்புகளிலும், ஆர்.சி.டி., அதாவது, 'ரெசிடுயல் கரன்ட் டிவைஸ் (Residual Current Device)' எனப்படும், உயிர் காக்கும் சாதனத்தை பொருத்த வேண்டும். மின் அதிர்ச்சியை தவிர்த்து, மனித உயிர்களை காக்கும் பொருட்டு, அதனுடைய மின் கசிவை உணரும் திறன், 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அதேபோல, 10 கிலோ வாட்டிற்கு மேற்பட்ட மின் சாதனங்களை பொருத்தி இருக்கும் பெரிய அங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவ கூடங்கள்,கிடங்குகள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளில், மின் இணைப்பு மொத்தமாக ஆரம்பிக்கும் இடத்தில், 300 மி.ஆ., அளவிற்கான மின் கசிவை உணரும் திறன்கொண்ட, ஆர்.சி.டி., (RCD) சாதனம் பொருத்த வேண்டும்.

விண்ணப்பத்தில் உறுதி

புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும், மேற்கண்ட உயிர் காக்கும் சாதனத்தை, மின் இணைப்பு கோரும் கட்டடத்தில் நிறுவி, அதை விண்ணப்ப படிவத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

இல்லையெனில், மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே, மின் இணைப்பு பெற்றவர்களும், இந்த சாதனத்தை பொருத்திக் கொள்ளலாம்.

ஆர்.சி.டி., சாதனம்

ஆர்.சி.டி., சாதனமானது, 'சுவிட்ச்' (switch) போன்றது; தானாகவே இயங்க கூடியது. வீடு உள்ளிட்ட கட்டடங்களில், மின் விநியோகம் துவங்கும் இடத்தில் பொருத்த வேண்டும். வீட்டில் உள்ள, 'அயர்ன்பாக்ஸ், மிக்சி' போன்ற சாதனங்கள் பழுதாகி இருந்து, அதை கவனிக்காமல் இயக்கும் போது, 'ஷாக்' அடிக்கும் சமயத்தில், ஆர்.சி.டி., சாதனம் தானாகவே செயல்பட்டு, மின் விநியோகத்தை துண்டிக்கும். பின், பழுதான சாதனத்தை மின் இணைப்பில் இருந்து விலக்கி விட்டு, ஆர்.சி.டி., சாதனத்தை மீண்டும் இயக்கி, மின்சாரத்தை பயன்படுத்தலாம். இதன் வாயிலாக, மின் விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிர் இழப்பு தடுக்கப்படும்.

மேலும் படிக்க

121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!

டீசல் விலை உயர்வு: 3 மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டியது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)