இன்றைய காலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை உண்பது ஒரு எலைட் முறையாக மாறியுள்ளது. அதே நேரத்தில் உணவு தேவையினை பூர்த்தி செய்ய இயற்கை விவசாயம் மட்டும் கைக்கொடுக்காது என ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றி மாறன். தொட்டத்தெல்லாம் வெற்றி என்பதற்கிணங்க தான் இயக்கிய அனைத்து படங்களும் வசூல் ரீதியில் சக்கை போடு போட்டதுடன் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாகவே கருதப்படுகிறார். இந்நிலையில் இன்று தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்க விழாவில் கலந்துக்கொண்டு பல்வேறு கருத்துகளை பேசினார்.
அப்போது ஒருவர், ”இன்னிக்கு நாம சாப்பிடுறதுலயே நிறைய விஷத்தை தான் சாப்பிட்டு இருக்கோம். விவசாயம் என்பது சுத்தமா போயிடுச்சு. விவசாயம், இயற்கை விவசாயம் இதை எப்படி பார்க்குறீங்க. அடுத்து வரை சமூகத்துக்கு சொல்ல விரும்புறது என்னனு” விவசாயம் தொடர்பான கேள்வி ஒன்றினை வெற்றிமாறன் முன் வைத்தார்.
இயற்கை விவசாயம் எலைட் முறையா?
இதற்கு பதிலளித்த இயக்குனர், இன்றை சூழ்நிலையில் மருந்து போட்டு விவசாயம் பண்ற விஷயம் தான் இருக்கு. இன்று இருக்கிற மக்கள் தொகைக்கு ஏற்ற உணவுத்தேவையினை இயற்கை விவசாயத்தால் மட்டும் பூர்த்தி செய்ய இயலாது என ஆய்வறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், இன்று இயற்கை விவசாயம் என்பது எலைட் மக்களுக்கானதாக உள்ளது. மாட்டுச்சாணி போட்டு வேளாண்மை பண்றது இயல்பான ஒன்று. அதை இன்று ஒரு எலைட் முறையா பார்க்கிற நிலைமை வந்துடுச்சு. வசதியானவங்களுக்கு மட்டுமானதாக இருக்கிறதை மாற்றணும். அதை எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டிய அவசியம் இருக்கு. நம்ம நாட்டுல ஒரு மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளக்கூடிய சூழல் உருவாக்க முடியுது என்றால் அதற்கு எல்லாருடைய ஆதரவும் வேண்டும். அரசும் அதற்கான நடவடிக்கை எடுக்கணும்.
ஏனென்றால் இப்ப உதாரணத்திற்கு 10 பேர் நிலம் வச்சு இருக்கோம். அதில் 10-வதாக இருப்பவர் நிலத்திற்கு உரம் போட்டாலும் அது எனது நிலத்தையும் சேர்த்து பாதிக்கும். எல்லோரும் ஒருங்கிணைந்தால் மட்டும் தான் இது சாத்தியமாகும்” என்றார்.
மேலும், அவர் கூறுகையில் “மருந்து இல்லாம பண்றது மட்டும் தான் நல்லதுனு சொல்றதே சில சமயம் நம்ம நெகடிவ் ஆக தான் பார்க்க வேண்டியிருக்கு. முழுசா எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, எல்லாத்தையும் ஒதுக்கவும் முடியாது. எல்லாம் பேலன்ஸாக இருக்கிறது தான் நல்லது” என்றார். சர்க்கரையை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடுவது உடலுக்கு நன்மையளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் தனது படப்பிடிப்பு பணிகளை தவிர்த்து, விவசாயத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனது வீட்டிற்கு அருகே ஒரு இடத்தில் இயற்கை முறையில் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க: