மழை மற்றும் வரத்து குறைவால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு இருக்கிறது. தற்போது தமிழகத்தில் சின்ன வெங்காயம் கிலோ 160 – 180 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 100 – 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாமானியர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் இவ்விலை உயர்வு பாதித்துள்ளது. இந்திய உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாலும், தேவை அதிகம் இருப்பதாலும் மத்திய அரசு துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
எதிர்கால தேவை மற்றும் விலை உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு வெங்காய சாகுபடி பரப்பை அதிகரிக்க மத்திய அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெங்காய சாகுபடி பரப்பை நாடு முழுவதும் அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து ஆராய பட்டன.
தமிழகத்தில் தற்போது 15 மாவட்டங்களில் வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. 50,000 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் சாகுபடியினை கூடுதலாக 75,000 ஏக்கரில் சாகுபடி செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இதற்காக அரசு மானிய விலையில் விதைகள் இயற்கை உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் போன்றவற்றை வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன.
புதிதாக வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் இலவசமாக அமைத்து தரப்பட உள்ளன. மேலும் வெங்காயம் சாகுபடி செய்து 2 மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடுவதால் ஒரு ஏக்கர் பரப்பளவில் 60:40 என்ற விகித சாரத்தில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப் படுவார்கள். இதன் மூலம் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய இயலும்.