உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது. அங்கிருந்து மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் அனுப்பிவைக்கப்படுகிறது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Lack of oxygen)
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்றம் அனுமதி (Permission of the Supreme Court)
இதைத்தொடர்ந்து மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அனுமதி அளித்தது.
320 பணியாளர்கள் (320 employees)
இதன் அடிப்படையில் உற்பத்திக்குத் தேவையான மின்சாரம், குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்ஸிஜன் உற்பத்தி பணியில், 320 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆக்ஸிஜன் உற்பத்தி (Oxygen production)
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆக்ஸிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டன.
ஆக்ஸிஜன் விநியோகம் (Oxygen supply)
இன்று காலை 7 மணி அளவில் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆக்ஸிஜன் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. கண்டெய்னர் லாரி மூலம் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:-
10 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் (10 metric tons of oxygen)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகமும் தொடங்கி உள்ளது. 4.820 டன் ஆக்ஸிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு உற்பத்தி செய்யப்படும்.
தமிழகத்திற்குதான் (For Tamil Nadu)
சிலநாட்களில் 35 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தும் தமிழகத்திற்கே விநியோகம் செய்யப்பட்டும்.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
மேலும் படிக்க...
தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!
கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!
அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்