புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலையில் மரணம் அடைந்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ஜெயராமன். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் நமது நெல்லைக் காப்போம் என்ற இயக்கத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து தமிழ்நாடு விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி, விவசாயிகள் அதனை பயிரிட்டுப் பயன்பெறும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.
இவர் மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, மிளகுசம்பா, குண்டு கார் போன்ற 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடையே பிரபலபடுத்தி உள்ளார். இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான வேளாண் பெருமக்களை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்தி, தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் உற்பத்தியினை உயர்த்திய பெருமைக்குரியவர்.
விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் ரகங்களை பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும், வேளாண்மைத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.