News

Friday, 01 July 2022 09:17 PM , by: R. Balakrishnan

Paddy storage depot

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் , சிலாவட்டம் பகுதியில், 65 கோடி ரூபாயில் முறையாக நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இவற்றில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், விவசாயிகள் அதிகளவில் நெல் பயிரிடுகின்றனர்.

நெல் சேமிப்பு கிடங்கு (Paddy Storage Depot)

மாவட்டத்தில் நவரை உள்ளிட்ட பருவங்களில் பயிரிடப்படும் நெல், அறுவடை செய்யப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பருவத்திற்கு, மாவட்டம் முழுதும் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 90க்கும் மேற்பட்ட இடங்களில், தற்காலிகமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

வாணிபக் கழக அலுவலர்கள், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்தனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம், அண்டவாக்கம், கீரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தற்காலிக திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டன. சில மாதங்களாக, அடிக்கடி மழை பெய்ததால், கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கொள்முதல் நிலையம் (Procurement Center)

இதைத் தவிர்க்க, மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் மற்றும் கிடங்குகள் அமைக்க வேண்டும் என, அரசு மற்றும் கலெக்டரிடம், விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். விவசாயிகள் நலன்காக்கும் கூட்டங்களிலும், விவசாய சங்கத்தினர் மனுக்கள் அளித்தனர்.

இதை பரிசீலத்த மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில், நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க இடம் முடிவு செய்தது. தொடர்ந்து, வருவாய் துறை மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் இணைந்து, கிடங்கு அமைத்தற்கான இடத்தை தேடின. இதையடுத்து, மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில், 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கலெக்டரின் உத்தரவையடுத்து, சிலாவட்டம் பகுதியில் கிடங்கு அமைப்பதற்காக, 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டெண்டர் (Tender)

இந்த கிடங்கில், 1.50 கோடி டன் நெல் சேமிக்க முடியும். அதே வளாகத்தில் 1 கோடி டன் நெல் சேமிக்கும் வகையில், மற்றொரு சேமிப்பு கிடங்கு கட்டப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பெயர் குறிப்பிடாத நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க, மாவட்டத்தில் முதல் முறையாக சிலாவட்டம் கிராமத்தில், 1.50 கோடி டன் நெல் சேமிக்கும் வகையில், கிடங்கு அமைக்கப்படுகிறது. இதே வளாகத்தில், 1 கோடி டன் நெல் சேமித்து வைக்கும் வகையில், மற்றொரு கிடங்கு அமைக்கப்படுகிறது. இந்த கிடங்கு, தானியங்கள் வைக்கும் இடமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். உயர் தரைத்தளம், கூரை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏக்கரில் கிடங்கு அமைக்கப்படுகிறது. 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது என அவர் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்ட தமிழக நதிகள் இணைப்பு விவசாய நலச்சங்க மாநில தலைவர் பழையனுார் மு.மணி கூறியதாவது: ஒவ்வொரு மழைக்காலத்திலும், திறந்த வெளி கொள்முதல் நிலையத்தில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும். ஈரப்பதத்தால் மூட்டைகளிலேயே பயிர் முளைக்கும் நிலை இருந்தது. தற்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக, சிலாவட்டம் கிராமத்தில் நெல் மூட்டைகள் பாதுகாக்க, சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுத்த, அரசு மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி என அவர் கூறினார்.

மேலும் படிக்க

மதுரையில் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலம்: அமைச்சர் தகவல்!

உரத்தட்டுப்பாட்டை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)