பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு (தமிழகத்தை சேர்ந்தவர்) வெள்ளிப்பதக்கம் வென்றார். ஷரத் குமாருக்கு வெண்கலம் கிடைத்தது.
உயரம் தாண்டுதல்
ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் ஆண்கள் உயரம் தாண்டுதலில் டி-42, டி-63 பிரிவு போட்டிகள் நடந்தன. மொத்தம் 9 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், ஷரத் குமார், வருண் பட்டி என மூன்று வீரர்கள் களமிறங்கினர். இதில் அதிகபட்சம் 1.77 மீ., உயரம் மட்டும் தாண்டிய வருண், 7வது இடம் பிடித்து வெளியேறினார். 1.83 மீ., உயரம் தாண்டிய இந்தியாவின் ஷரத் குமார், மாரியப்பன், அமெரிக்காவின் சாம் கிரீவ் என மூன்று வீரர்களும் பதக்கங்களை உறுதி செய்ய, மற்ற வீரர்கள் வெளியேறினர்.
அடுத்து உயரம் 1.86 மீ., ஆக அதிகரிக்கப்பட்டது. மாரியப்பன், சாம் கிரீன் இதைத் தாண்டினர். மூன்று வாய்ப்பிலும் ஏமாற்றிய ஷரத் குமார் (1.83 மீ.,), மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார். அடுத்து உயரம் 1.88 மீ., ஆக அதிகரிக்கப்பட்டது. இதை மாரியப்பன் தாண்டவில்லை. மூன்றாவது வாய்ப்பில் சாம் கிரீவ் (1.88 மீ.,), சரியாக உயரத்தை தாண்டி, தங்கத்தை தட்டிச் சென்றார். மாரியப்பனுக்கு (1.86 மீ.,) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், இம்முறை வெள்ளிப்பதக்கத்துடன் திரும்புகிறார். இதுவரை டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்கள் கைப்பற்றியது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமித் தங்கப் பதக்கம், ஜஜாரியா வெள்ளிப் பதக்கம், சுந்தர் வெண்கல பதக்கம் என மூன்று பேர் பதக்கம் வென்றனர். தவிர ஒட்டுமொத்த பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியா 7 பதக்கம் வென்றது. மகளிர் 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவினா தங்கம் வென்றுள்ளார்.
மேலும் படிக்க
பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ்: வெள்ளி வென்றார் இந்தியாவின் பவினா!