சென்னையில், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையிலும், மழை நீர் வீணாவதை தடுக்கும் வகையிலும், புதிதாக அமைக்கப்படும் பூங்காக்களில், பூமிக்குள் நீர் உறிஞ்சும் தன்மையிலான குட்டைகளை, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி, 2011ம் ஆண்டு வரை, 10 மண்டலங்களுடன் 155 வார்டுகளை கொண்டு செயல்பட்டு வந்தது. பின், அருகில் இருந்த ஊராட்சிகள், பேரூராட்சிகள், சென்னை மாநகராட்சியுடன், 2011ல் இணைக்கப்பட்டன. குறிப்பாக சோழிங்கநல்லுார், அம்பத்துார், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
மழைநீர் சேகரிப்பு பூங்கா (Rain water saving Park)
சென்னை மாநகராட்சியோடு இப்பகுதிகள் இணைக்கப்பட்டு, 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும், போதிய நகர கட்டமைப்பு இல்லாத நிலையே இன்றளவும் தொடர்கிறது. அதேபோல், இணைக்கப்பட்ட பகுதிகளில் போதிய அளவில் விளையாட்டு அரங்கம், பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகளும் இன்றளவும் ஏற்படுத்தப்படவில்லை. அதேநேரம், மாநகராட்சிக்குச் சொந்தமான திறந்தவெளி காலி இடங்கள் அதிகளவில் உள்ளன. அவற்றில் பல பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நிலையில், அவற்றை மீட்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
அதேநேரம், அடையாளம் காணப்பட்டுள்ள திறந்தவெளி இடங்களில் பூங்கா, விளையாட்டு அரங்கம் அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இவற்றில் புது முயற்சியாக, பூங்காக்களில், மழை நீர் சேகரிப்புடன் கூடிய குட்டைகள் ஏற்படுத்தவும், மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, பொது தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
சென்னையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி மக்களுக்குத் தேவையான வசதிகளை, மாநகராட்சி செய்து வருகிறது. அதன்படி, 126 திறந்தவெளி இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதில், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்படும். மழை நீர் வடிகால் இணைப்புடன் கூடிய குட்டை அமைக்கப்படும். இந்த குட்டையின் அடிப்பகுதி, நீரை பூமிக்குள் உறிஞ்சும் தன்மையில் அமைக்கப்படும்.
சிங்கார சென்னை 2.0 (Singara Chennai 2.0)
மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பட்சத்தில், மழை நீர் வடிகால் வாயிலாக, குட்டைக்குள் நீர் கொண்டு வரப்படும். குட்டை நிரம்பும்பட்சத்தில், அவை வெளியேற்றும் கால்வாய் வாயிலாக, அருகிலுள்ள குட்டை அல்லது குளம் ஆகிய பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படும். இதன் வாயிலாக, குடியிருப்பு பகுதிகளில் நீர் தேக்கத்தை தடுக்க முடியும். இந்த 126 பூங்காக்களில், முதற்கட்டமாக 50 பூங்காக்களில், குட்டையுடன் கூடிய மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், 50 கோடி ரூபாயை தமிழக அரசு அளிக்கிறது. இத்திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்த பின் செயல்படுத்தப்படும்.
இந்த புதிய முயற்சி மக்களிடையே வரவேற்பை பெறும்பட்சத்தில், மற்ற இடவசதி உள்ள பூங்காக்களில் விரிவுபடுத்தப்படும். அதேபோல், குடிசை மாற்று பகுதிகளில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், எட்டு இடங்களில், 50 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கத்தில் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வசதி ஏற்படுத்தப்படும். தமிழக அரசின் ஒப்புதல் பெற்று, விரைவில் பணிகள் துவக்கப்படும்.
சென்னையில் 126 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு, 50 கோடி ரூபாய் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பூங்காவும், குறைந்தபட்சம் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
காபி ஏற்றுமதி அமோகம்: 100 கோடி டாலரை தாண்டியது!
நெல்லை அரிசியாக மாற்றும் சிறிய இயந்திரம்: விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்!