பெப்சிகோ (PepsiCo) இந்தியா, அதன் பிராண்டான "லே'ஸ்" (Lay's ) மூலம், விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஒரு பயிர் மற்றும் ப்ளாட்-லெவல் முன்கணிப்பு நுண்ணறிவு மாதிரியை அறிவித்துள்ளது. இது பயனர்களுக்கு ஏற்ற மொபைல் பயன்பாடுகளில் (app) செயல்பாட்டு டேஷ்போர்டுகள் மூலம் உருளைக்கிழங்கு விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளுக்கு உதவுகிறது.
பயிர் நுண்ணறிவு மாதிரியானது, முன்னணி உலகளாவிய வேளாண் தொழில்நுட்ப நிறுவனமான க்ரோபின் (Cropin) உடன் இணைந்து தொடங்கப்பட்டது. இது பெப்சிகோவின் இந்தியாவிற்கான 'துல்லிய வேளாண்மை' மாதிரியின் ஒரு பகுதியாகும். இத்திட்டமானது குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பண்ணைகளில் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது என பெப்சிகோ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான விவசாய நிலங்களை வைத்திருக்கிறார்கள். தண்ணீர், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயல்படக்கூடிய வானிலை தரவு போன்ற விவசாய இடுபொருட்களின் உகந்த நுகர்வுகளை மதிப்பிடுவதற்கான வழிமுறைகள் இல்லாததால் தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக, உருளைக்கிழங்கில் ப்ளைட் பயிர் நோயால் ஏற்படும் பாதிப்பை முன்கூட்டியே கணிக்கப்படாவிட்டால் மகசூல் இழப்பானது 80 சதவீதம் வரை செல்லும். நிலத்தில் உறைபனி காரணமாக ஏற்படும் குறிப்பிடத்தக்க மகசூல் இழப்பு உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு மற்றொரு கடுமையான பிரச்சினையாக உள்ளது.
"PepsiCo-விற்கு சொந்த பிராண்டான "Lay's" இன் கீழ் மேற்கொள்ள உள்ள புதிய முயற்சியானது, நுண்ணறிவுகளை வழங்க தொலைநிலை உணர்திறன் தரவுகளுடன் தொடர்புடைய செயற்கைக்கோள் படங்களைப் (satellite imagery) பயன்படுத்தி இந்த சவால்களை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு 10 நாட்களுக்கு முன்பே முன்னறிவிப்பை உருவாக்கும் தன்மை கொண்டது. இது விவசாயிகளுக்கு வெவ்வேறு பயிரின் வளர்ச்சி நிலைகளை அடையாளம் காண உதவுகிறது, மேலும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் வேளாண் தரவுகளை உடனடியாக வழங்கும்.
இந்தியாவில், பெப்சிகோ 14 மாநிலங்களில் 27,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுகிறது. மேலும் அதன் லே'ஸ் பிராண்டிற்கான 100 சதவீத உருளைக்கிழங்கு நாட்டிலுள்ள விவசாயிகளிடமிருந்து பெறப்படுகிறது. அதன் பொருட்டு விவசாயிகளுக்கு தேவையான பயிற்சி மற்றும் கையடக்கத் திறன் ஆகியவை கள வேளாண் வல்லுநர்கள் மூலம் வழங்கப்படுகின்றன, அவர்கள் டாஷ்போர்டைப் (dashboard) புரிந்துகொள்ளவும் நுண்ணறிவுகளைப் பயன்படுத்தவும் உதவுகிறார்கள்.
பெப்சிகோ இந்தியாவின் வேளாண் இயக்குநர் அனுகூல் ஜோஷி இதுகுறித்து தெரிவிக்கையில், ”இந்த புதிய முயற்சியில் க்ரோபின் உடனான எங்கள் கூட்டாண்மை மூலம், இந்தியா முழுவதும் உள்ள பெப்சிகோ விவசாயிகளுக்கு பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதும், மகசூல் மற்றும் தரத்தை அதிகரிக்க பயிர் ஆரோக்கியத்தை நிகழ் நேர கண்காணிக்க விவசாயிகளுக்கு உதவுவதே எங்கள் குறிக்கோள்” என தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்த வேளாண் முன்னோட்ட மாதிரியானது 62 பண்ணைகளில் சோதனை முறையில் மேற்கொள்ளப்படுகிறது. குஜராத்திலுள்ள 51 மற்றும் மத்தியப் பிரதேசத்திலுள்ள 11 விவசாய பண்ணைகள் இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் காண்க:
24 மணி நேரத்தில் விவசாயிகளுக்கு ரூ.62,000 இழப்பீடு- வடமாநில விவசாயிகளை கலங்க வைத்த ஆலங்கட்டி மழை