இந்தியாவின் ஜனாதிபதி, திரௌபதி முர்மு தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்கி பஞ்சாயத்துகளை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய மாநாட்டையும் நேற்று (ஏப்ரல் 17 ) புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதுடன், சிறந்த நிர்வாகம், முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் பஞ்சாயத்துத்துக்களை பாராட்டி ஊக்கமளிக்கும் வகையில் குடியரசுத்தலைவர் தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்கி வருகிறார். இதில் சிறந்த நிர்வாகம் (Good Governance) என்கிற பிரிவில் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் உள்ள பிச்சனூர் பஞ்சாயத்திற்கு விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி பேசிய குடியரசுத் தலைவர், கடந்த பல ஆண்டுகளாக நகர்ப்புறம் விரைவாக வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், பெரும்பாலான மக்கள் இன்றும் கிராமங்களில் வசித்து வருவதாக கூறினார். நகரங்களில் வசிப்பவர்களும் கிராமங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். கிராமங்களின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கிராம வளர்ச்சிக்கான மாதிரி குறித்தும் அதை அமல்படுத்துவது குறித்தும், கிராமத்தில் வசிப்பவர்கள் முடிவு செய்ய இயலும் என்றும் அவர் கூறினார். அரசின் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை மட்டும் அமல்படுத்தாமல் புதிய தலைவர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் இடமாக பஞ்சாயத்துகள் திகழ்கின்றன என்று அவர் தெரிவித்தார். ஒரு பஞ்சாயத்தில் உள்ள சிறந்த நடைமுறைகளை இதர பஞ்சாயத்துகளில் அமல்படுத்தும் போது, நமது கிராமங்களை விரைவாக வளர்ச்சியடையச் செய்து செழுமைப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
சமூகத்தில் அனைத்து பிரிவினரும் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பஞ்சாயத்துப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறை உள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.
உள்ளூர் கிராமப்புற பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 31.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளில் 46 சதவீதம் பேர் மகளிர் என்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். கிராமப் பஞ்சாயத்துப் பணிகளில் மகளிர் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கான முயற்சிகளில் அவர்களது குடும்பத்தினர் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
விழாவில் பேசிய மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங், 21 மாநிலங்களில் 3 அடுக்கு பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றார். பஞ்சாயத்துகளில் 33% அரசியலமைப்பு விதிகளுக்கு அப்பால் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மீதமுள்ள மாநிலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
பஞ்சாயத்துகளின் முழுமையான வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்த ஸ்ரீ கிரிராஜ் சிங், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) கீழ் வகுக்கப்பட்ட ஒன்பது கருப்பொருள்களின் அடிப்படையில் பஞ்சாயத்துகளை திட்டங்களின் செறிவூட்டலை நோக்கி கொண்டு செல்ல ஒரு வளர்ச்சி மாதிரியை திட்டமிட வேண்டும் என்றார். பஞ்சாயத்துகள் வளர்ச்சியின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்று மோடி அரசு உறுதியாக நம்புகிறது என்றார்.
மேலும் காண்க: