மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம், மரம்சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
1.16 மரக்கன்றுகள் நடவு (1.16 Planting of saplings)
இதன் ஒருபகுதியாக, கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்த மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சத்தும் 16 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நடும் பணியை இவ்வியக்கம் முன்னெடுத்துள்ளது. கடந்த செப்.30-ம் தேதி முதல் மரம் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநிலத்தின் 23 மாவட்டங்களில் 285 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அனைத்து மரக்கன்றுகளையும் அவர்கள் ஒரு வாரத்திற்குள் தங்கள் நிலங்களில் நடவு செய்துவிடுவார்கள்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், அரியலூர், கடலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை, வேலூர் உட்பட 23 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கிவிட்டன.
காந்தி ஜெயந்தி அன்று நடந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, சேலத்தில் சேலம் தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஏ.பி.சக்திவேல், அரியலூர் மாவட்டத்தில் திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ. திரு.துரை சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதேபோல், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயகாந்தன் அவர்கள் பங்கேற்றார். பல்வேறு இடங்களில் ஈஷா தன்னார்வலர்களும் விவசாயிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மகோகனி போன்ற விலை மதிப்புமிக்க மரங்களை விவசாயிகள் தேர்வு செய்துள்ளனர். குறைந்தபட்சம் 400 மரங்கள் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் மரங்கள் வரை விவசாயிகள் நட உள்ளனர்.
மேலும் படிக்க...
83 லட்சத்தைத் தாண்டிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் மரக்கன்றுகள் நடும் திட்டம்
அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு!