நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டை அறிமுகம் செய்யும் திட்டத்தை, ரிசர்வ் வங்கி, கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2015 – 16 ஆண்டறிக்கையில், ரிசர்வ் வங்கி, சோதனை முயற்சியாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட உள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால், ஆண்டுகள் பல கடந்தாலும், அதற்கான முயற்சிகளை மத்திய வங்கி தீவிரமாக எடுக்கவில்லை. கிட்டத்தட்ட கிடப்பில் போட்டுவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு (Plastic Rupee Note)
முதல் காரணம், இந்தியாவின் பருவநிலை. இந்தியாவின் அதிக வெப்பம் கொண்ட சூழலுக்கு, இந்த பாலிமர் பிளாஸ்டிக் தாள்கள் ஏற்புடையதாக இல்லை என ரிசர்வ் வங்கி கருதுகிறது. இரண்டாவது முக்கிய காரணம், நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.யு.பி.ஐ., வாயிலாக, பட்டன் போன் வரை, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களும், சிறு சிறு தொகைகளை கூட, டிஜிட்டல் வாயிலாக செலுத்த பழகி வருகின்றனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது பிளாஸ்டிக் நோட்டுகள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.ரிசர்வ் வங்கியின் 2015_16 ஆண்டறிக்கையில், 10 ரூபாய் மதிப்பிலான 100 கோடி நோட்டுகள் அச்சிடப்பட்டு, நாட்டின் பலதரப்பட்ட பருவநிலை கொண்ட பகுதிகளில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதிக வெப்பம் காரணமாக, இந்த நோட்டுகள் எளிதாக தீப்பிடிக்க கூடியவையாக இருந்தன.மேலும், வங்கி தரப்பிலும் இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அதிக வெப்பம் காரணமாக சேதமானால், மாற்றிகொடுப்பது என்பது சிக்கலான ஒரு நடைமுறையாக மாறிவிடும் என தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், தற்போதுள்ள ரூபாய் காகித நோட்டுகள் கறை படிந்தாலோ, சேதமடைந்தாலோ எளிதாக வங்கிகளில் மாற்றிக் கொள்ள இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி தரவுகளின் படி, ஆண்டுக்கு 100.50 சதவீதம் அளவுக்கு, யு.பி.ஐ., அடிப்படையிலான பணப்பரிவர்த்தனைகள் எணிக்கையும், தொகையும் அதிகரித்து வருகின்றன.
எனவே, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டு வரும் திட்டத்தை, ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட கிடப்பில் போட்டுவிட்டதாகவே கருதலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது, பிளாஸ்டிக் நோட்டுகள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படிக்க
பென்சன் வாங்குவோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு!