கொரோனா தொற்றை கையாள்வதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, மாநிலங்கள் மற்றும் மாவட்ட கள அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக கலந்துரையாடினார்.
அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு அதிகரிப்பை சமாளிக்க, மேற்கொள்ளப்பட்ட புதுமையான நடவடிக்கைகள் பற்றி தங்கள் அனுபவங்களை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர். ஊரகப் பகுதிகளில் மருத்துவ கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவர்கள் தெரிவித்தனர். சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகளை தொகுக்கும்படி அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பின், அதிகாரிகளிடம் உரையாற்றிய பிரதமர், இந்த சிக்கலான நேரத்தில் அர்ப்பணிப்புடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்ட சுகாதார ஊழியர்களையும், முன்களப் பணியாளர்களையும், நிர்வாகிகளையும் பாராட்டினார். இதே வீரியத்துடன் அவர்கள் தொடர்ந்து பணியாற்றி முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார்.
சரியான மற்றும் முழுமையான தகவல் அவசியம்
போர்களத்தில் தலைமை அதிகாரி போல, கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் , அனைத்து அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது என பிரதமர் கூறினார். உள்ளூர் கட்டுப்பாட்டு மண்டலங்கள், தீவிர பரிசோதனை, மக்களுக்கு சரியான மற்றும் முழுமையான தகவல் ஆகியவை இந்த தொற்றுக்கு எதிரான ஆயுதங்கள் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நேரத்தில், சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது அதேபோல், பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்..
அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவேண்டும்
தொற்று பாதிப்பை நிறுத்த வேண்டும் என்றும் அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடையின்றி இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளிலும், பிரதமரின் நல நிதி மூலம் ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருவதாகவும், பல மருத்துவமனைகளில் இந்த ஆலைகள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மிகப் பெரிய அளவில் அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, தடுப்பூசி முறையை சுகாதாரத்துறை அமைச்சகம் ஒழுங்குபடுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அதேபோல், கள்ளச்சந்தை விற்பனையும் தடுக்கப்பட வேண்டும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு முன்களப் பணியாளர்களை அணிதிரட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க...
தட்டுப்பாட்டைப் போக்க அதிரடி- நெதர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த ஆக்சிஜன்!
கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!