
பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு 13 மாவட்டங்களில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான 6-வது தவணையாக ரூ.17,793 கோடியை அண்மையில் பிரதமர் மோடி விடுவித்தார்.
பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடு
இந்நிலையில், விவசாயிகள் அல்லாதோர் பலர் இந்த திட்டத்தில் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தத் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருச்சி , கரூர் , மதுரை , விழுப்புரம் , திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இது தொடர்பான விசாரணையை வேளாண் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றர். விசாரணையில் போலியாகப் பல பயனாளிகளை இணைத்துப் பல கோடி வரை மோசடி நடந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆயிரம் போலி விவசாயிகள் கணக்கில் 2 தவணையாக ரூபாய் 4000 செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.15.40 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில், 18 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், போலி முகவரி கொடுத்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் போலியாகப் பணத்தைப் பெற்ற நபர்களிடம் இருந்து பணத்தை திரும்பப்பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க...
PM-Kisan திட்டம் : உங்கள் கணக்கு விவரங்களை புதுப்பிப்பது, திருத்துவது எப்படி? முழு விவரம் இங்கே!
விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.36,000/- பெறலாம்?