பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் (பிஎம் கிசான்) 12வது தவணைக்காக நிறையப் பேர் காத்திருக்கிறார்கள். இதற்காகக் காத்திருந்த கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 12ஆவது தவணைப் பணம் 2000 ரூபாய் இந்த மாதமே வங்கிக் கணக்கில் வரவிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து 12வது தவணை பணம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பணம் உங்களுடைய வங்கிக் கணக்கில் வருமா இல்லையா நீங்கள் சரிபார்க்கலாம்.
பிஎம் கிசான் (PM Kisan)
முதலில் நீங்கள் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்திலேயே, ஃபார்மர்ஸ் கார்னர் என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் ’பெனிஃபிசரி ஸ்டேட்டஸ்’ என்ற ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் பயனாளி தொடர்பான பெயர் மாநிலம் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். இப்போது பயனாளியின் ஸ்டேட்டஸ் உங்களுக்கு காண்பிக்கப்படும். இதில், விவசாயிக்கு தவணை கிடைத்ததா, இல்லையா என்பது குறித்த தகவலும் இருக்கும்.
சமீபத்தில் விவசாயிகளிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான திட்டங்களில் கோடிக்கணக்கான பயனாளிகள் பங்கேற்பதாகக் கூறினார். இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருவதாகவும், நாட்டின் விவசாயத் துறையிலும் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகளின் பொருளாதார நிலையை வலுப்படுத்தவே மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில், தகுதியான விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6,000 ரூபாய், மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இ-கேஒய்சியை முடிக்காமல் இந்த முறை தவணைத் தொகை வழங்கப்பட மாட்டாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அந்த வேலையை முடித்தால்தான் பணம் கிடைக்கும்.
மேலும் படிக்க
ரேஷன் கடையில் இனிமேல் இதனை செய்யக் கூடாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு!
அரிசி ஏற்றுமதி செய்ய ஒரே ஒரு கன்டிஷன்: மத்திய அரசு அறிவிப்பு!