வால்மீகியின் ராமாயண கதைப்படி ராமனின் சகோதரரான லஷ்மணனனை உயிர் பிழைக்க வைத்ததாக கூறப்படும் மூலிகை சஞ்சீவினி ஆகும். இறந்தவர்களை கூட உயிர் பெற செய்யும் இந்த மூலிகை இமயமலையின் உயர்ந்த, குளிர் நிறைந்த, இருள் பகுதிக்குள் புதையுண்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி கூறுகையில், " காஷ்மீரின் லடாக் பகுதியில் ரோடியோலா என்ற மூலிகை வளர்கிறது. இதில் எண்ணற்ற மருத்துவ குணம் நிறைந்த இந்த மூலிகையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வருமானம் ஈட்டலாம்" என்று யோசனை தெரிவித்தார்.
லடாக் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் (டி.ஐ.எச்.ஏ.ஆர்.), சோலோ என்னும் மூலிகையை அதிக அளவில் பயிரிட்டு வளர்க்க புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. இதற்காக தன்னார்வ நிறுவனங்கள் உதவியையும், லடாக் பகுதி மக்களையும் அதிக அளவில் பயிரிட ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டி.ஐ.எச்.ஏ.ஆர். (DIHAR) இயக்குநர் கூறுகையில், “கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி முதல் 18,000 அடி உயரம் கொண்ட லடாக் பகுதியில் மட்டுமே சோலோ மூலிகை வளர் கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும். நினைவாற்றலை மீட்டுக் கொடுக்கும். சில வகை புற்றுநோய்க்கும் மருந்தாக உள்ளது. இந்த அதிசய மூலிகையை அதிகமாக பயிரிட்டு வளர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
சோலோ மூலிகையானது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையாக இருக்கும் மலைப்பகுதிகளில் மக்களின் உயிர்காக்கும் மருந்தாக விளங்குகிறது. லடாக் பகுதி மக்கள் இதனை தயிருடன் கலந்து சாப்பிடுகின்றனர். அப்பகுதி மக்களின் ஆரோக்கியத்திற்கு இதுவும் முக்கிய காரணம்.
நன்றி:இந்து தமிழ்
Anitha Jegadeesan
Krishi Jagran