தெருவோர வியாபாரிகளின் வீடுகளுக்கே சென்று கடன் வசதி வழங்கும் புதிய மொபைல் ஆப்-பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
ஆத்ம நிர்பார் நிதி தொகுப்பின் (AtmaNirbhar Nidhi) கீழ், நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி யோஜனா (PM SVANidhi) திட்டத்தின் கீழ், சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்கான திட்டம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது.
பிரதமரின் ஸ்வநிதி மொபைல் ஆப் (PM SVANidhi Mobile App)
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், நுண்கடன் வசதி அவர்களின் இல்லங்களுக்கே சென்று சேரும் வகையில் பிரதமர் ஸ்வநிதி அலைபேசிச் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த மொபைல் செயலியை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செயலர் துர்கா சங்கர் மிஷ்ரா அறிமுகம் செய்து வைத்தார்.
மொபைல் ஆப்-ன் நோக்கம் (The purpose of the mobile app)
தெருவோர வியாபாரிகள் கடன் விண்ணப்பங்களைப் பெறுவது, அதற்கான கடன் வழங்குமுறைகளைப் பின்பற்றுவது, போன்ற பல்வேறு பணிகளை உள்ளடக்கிய, களப் பணியாளர்களுக்கும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு டிஜிட்டல் பாலமாக அமைவதை நோக்கமாகக் கொண்ட எளிமையான வகையில் பயன்படுத்தக்கூடிய செயலியாகும்.
பாங்கிங் கரஸ்பாண்டன்ட் - வங்கி தொடர்பாளர்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள்/ நுண்கடன் நிதிஅமைப்புகள் ஆகியவற்றின் முகவர்கள், தெரு வியாபாரிகளுடன் நெருக்கமாக இருக்கக் கூடியவர்கள். இதுபோன்ற களப் பணியாளர்கள் மூலமாக இத்திட்டம் அதிக அளவிலான மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த களப்பணியாளர்களுக்கு உதவும் வகையிலான டிஜிட்டல் தொழில்நுட்பத் தளமாக இந்தப் பிரதமர் ஸ்வநிதி அலைபேசிச் செயலி உள்ளது.
தெருவோர வியாபாரிகள், நுண்கடன் பெறுவதற்கு காகிதங்கள் இல்லாமல், டிஜிட்டல் தளம் மூலமாகவே கடன் பெறமுடியும் என்பதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மேலும் ஒரு உந்துசக்தியாக இந்தச் செயலி அமையும் என்று நம்பப்படுகிறது.
பிரதமர் ஸ்வநிதித் திட்டம் பற்றிய விவரங்கள் கொண்ட இணையதளத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்தச் செயலிலும் உள்ளன. எங்கே வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்ற வசதியும் உள்ளது. பிரதமர் ஸ்வநிதித் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவது 2 ஜூலை 2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
பிரதமரின் ஸ்வநிதி யோஜனாவின் சிறப்பம்சங்கள் (Prime Minister's Swanithi Yojana Important Feature)
-
வியாபாரிகள் பணி மூலதனக் கடனாக பத்தாயிரம் ரூபாய் வரை பெற முடியும்.
-
இந்தக் கடன் ஓராண்டு காலத்தில், மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.
-
உரிய காலத்தில் இந்த கடன் தொகையைச் செலுத்தி வந்தால், அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடனை திருப்பிச் செலுத்தி விட்டால், ஆண்டொன்றுக்கு 7 சதவிகிதம் என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் அளிக்கப்படும்.
-
இந்த மானியத்தொகை, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை நேரடியாக செலுத்தப்படும்.
-
பணத்தை முன்னதாகவே திருப்பிச் செலுத்தி விட்டால், அதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட மாட்டாது.
-
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்களுக்கு, ஊக்கத்தொகையாக மாதமொன்றுக்கு 100 ரூபாய் திருப்பி அளிக்கப்படும்.
-
உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவது, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடன் தொகையை திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றின் மூலமாக, மேலும் அதிகக் கடன் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்கான தங்களது லட்சியத்தையும் தெரு வியாபாரிகள் அடைய முடியும்.
1,54,000 வியாபாரிகள் விண்ணப்பம்
இது வரை பல்வேறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் இருந்து ஒரு லட்சத்து 54 ஆயிரத்துக்கும் அதிகமான தெரு வியாபாரிகள் பணி மூலதனக் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். 48,000 பேருக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 50 லட்சத்துக்கும் அதிகமான தெரு வியாபாரிகள், பயனடைவார்கள் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க....
ஓசூரில் ரூ.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம் - மலர் விவசாயிகள் மகிழ்ச்சி!
மூலிகைகளின் அரசி துளசியின் மருத்துவ குணங்கள் தெரியுமா உங்களுக்கு!
ஆண்டு முழுவதும் வருமானம் அளிக்கும் செடி முருங்கை சாகுபடி