1. பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகை
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் அவர், விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அவர் ஹெலிகாப்டரில் போர் நினைவு சின்னம் அருகே உள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளம் வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் செல்கிறார். அங்கு அவர் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து காரில், மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் சென்று ராமகிருஷ்ணா மடம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
2. 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தற்போது 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.
3. புதியதாக டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
திருச்சியில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், டைடல் பார்க் அமைக்கப்படும் என, தொழில்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு..
ராசிபுரம் மற்றும் காரைக்குடியில், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!
4. தக்காளி விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் வேதனை
மதுரை மார்க்கெட்டில் தக்காளி விலை 10 ரூபாய்க்கும் கீழ் குறைந்ததால் இருப்பு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் புதன்கிழமை தக்காளி விலை கடும் சரிவை பதிவு செய்ததையடுத்து விவசாயிகள் நூற்றுக்கணக்கான பெட்டிகளை குவித்து வைத்துள்ளனர்.
5. சென்னை - கோவை வந்தே பாரத் ரெயில் சேவை நாளை தொடக்கம்
சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை 8-ந் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை - கோவை வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. 6 மணி நேர பயணத்திற்கு ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
6. ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் அமோகம்!
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கொங்கணாபுரம், கோனேரிப்பட்டி, தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர் அந்தியூர், பவானி, சித்தார், அம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 596 மூட்டைகளில் பி.டி. ரக பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 779-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 366-க்கும் விற்பனை ஆனது. பருத்தி மொத்தம் ரூ.13 லட்சத்து 55 ஆயிரத்து 781-க்கு ஏலம் போனது.
7. சர்க்கரை உற்பத்தி குறைவு
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 366 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தேசிய அளவில் 194 சர்க்கரை ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 338 ஆலைகள் சர்க்கரை உற்பத்தியை நிறுத்தி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சீனி உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகளில் ஏப்ரல் மத்தியில் சர்க்கரை உற்பத்தி நிறுத்தப்பட்டு விடும் நிலையில் மேலும் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் சீனியின் விலை கிலோ ரூ. 37 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. குறையப்போகும் சிலிண்டர் விலை.!