பொங்கல் பரிசுத் தொகை 1,000 ரூபாயை, தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பரிசு (Pongal Gift)
தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.
வங்கி கணக்கு (Bank Account)
பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடின. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக, 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகை 1,000 ரூபாயை, தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் 1,000 ரூபாய் செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் முறைகேடுகள் நடைபெறாமல் உரிய நபருக்கு ரொக்கப் பரிசு கிடைக்கும். மேலும், பொது மக்களுக்கு நேர விரயம், அலைச்சல் ஏற்படாது. தற்போது தமிழகம் முழுவதும் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 14.60 லட்சம் பேர் வங்கிக் கணக்கு தொடங்கவில்லை. அதனால் 14.60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மேலும் படிக்க
பென்சன் உயர்வு: பழைய ஓய்வூதிய திட்டம்: நிதியமைச்சரிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!