Postal Department home deliver 19 tonnes of mangoes in Bengaluru
விவசாயிகளிடமிருந்து நேரிடையாக கடந்த ஒரு மாதத்தில் அஞ்சல் துறையின் மூலம் 19 டன் மாம்பழங்கல் ஹோம் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரை மாம்பழ சீசன் களைக்கட்டும். ஆனால் இந்த ஆண்டு நிலவும் அதிகப்பட்ச வெப்பநிலையால் பல மாநிலங்களில் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும் கர்நாடக மாநிலத்தில் இந்திய அஞ்சல் துறை மூலம் 19 டன் மாம்பழங்கள் ஹோம் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்தப்போதிலும், தற்போது வரை டெலிவரி செய்யும் அளவானது திருப்திகரமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு கொரோனாவினால் பொது முடக்கம் ஏற்பட்ட நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு கர்நாடகா மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KSMDMCL), இந்திய அஞ்சல் துறையுடன் கைக்கோர்த்து மாம்பழங்களை தபால் துறை மூலம் டோர் டெலிவரி செய்யும் 'கர்சிரி' என்ற முன்மாதிரி நடைமுறையினை அறிமுகப்படுத்தினர்.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இத்திட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டில் 75 டன் மாம்பழங்களையும், 2022-இல் 70 டன்களையும் டோர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு “குறைவான விளைச்சல் இருந்தபோதிலும், நாங்கள் ஏப்ரல் 5 முதல் மே 12 வரையிலான ஒரு மாதத்தில் 19 டன் மாம்பழங்களை வீட்டிற்கு டெலிவரி செய்துள்ளதாக” மூத்த KSMDMCL அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
www.karsirimangoes.karnataka.gov.in என்ற இணையதளத்தில் மாம்பழங்களை ஆர்டர் செய்யலாம். அல்போன்சா, பாதாமி, அபூஸ், பங்கனபள்ளி, கேசர், நீலம், ஹிமாம் பசந்த், செந்தூர் மற்றும் மல்லிகா மற்றும் பல வகையான மாம்பழங்களில் 3 கிலோ வரை ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.
“வீட்டுக்கு அனுப்பப்படும் மாம்பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்டவை. சந்தைகளில் சில வியாபாரிகள் புற்று நோயை உண்டாக்கும் கால்சியம் கார்பைடு உதவியுடன் இன்றளவும் மாம்பழங்களை பழுக்க வைத்து வருகின்றனர். டோர் டெலிவரி செய்யப்படுபவை இயற்கையாகவே பழுக்கவைக்கப்பட்டவை அல்லது KSMDMC-அங்கீகரிக்கப்பட்ட பழுக்க வைக்கும் அறைகளில் இருந்து வருகின்றன. அங்கு மாம்பழங்களை பழுக்க வைக்க இயற்கை எத்திலீன் வாயுவைப் பயன்படுத்துகின்றன, இந்த நடைமுறை இன்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறையாகும்," என்றும் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, ஹூப்பள்ளி-தர்வாட், மைசூர், பெலகாவி, மங்களூரு, ஹாசன், மாண்டியா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகள் உட்பட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் (31 பின் குறியீடுகளில்) மாம்பழங்களை ஹோம் டெலிவரி செய்து வருவதாகவும், KSMDMCL அதிகாரி தெரிவித்துள்ளார்.
pic courtesy: DH PHOTO BY BK JANARDHAN
மேலும் காண்க:
ஒன்றிய அரசின் நீர்வள பாதுகாப்பு விருது- தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நாமக்கல்