தமிழக காவல் துறைக்கு மிக உயிரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டது. கொடியை துணை ஜனாதிபதி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் பெற்று கொண்டார். தமிழக போலீஸ் துறைக்கு மிக உயிரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு , சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெங்கையா நாயுடுவை, டிஜிபி, கமிஷனர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து காவல்துறை சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் சிறப்பு கொடி (President's Special Flag)
ஜனாதிபதியின் சிறப்பு கொடியை வெங்கையா நாயுடு வழங்க, ஸ்டாலின் பெற்று கொண்டார். இந்த கொடியை, இதுவரை இந்தியாவில் 10 மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடுவுக்கு சதுரங்க அட்டையை ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: ஜனாதிபதியின் கவுரவ கொடியை பெற்றது ஒட்டு மொத்த தமிழக காவல்துறைக்கே பெருமை. காவல் துறையின் 10 ஆண்டு கடின உழைப்பிற்கான பெருமை. ஜனாதிபதி கொடியை பெற்றதால் தமிழக காவல்துறை உயர்ந்த அங்கீகாரத்தை பெறுகிறது. காவல் துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்ததில் தமிழகம் முன்னோடி.
தமிழக காவல் துறை (Tamilnadu Police)
தமிழக காவல்துறை நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது. முன்னோடி மட்டுமல்ல முன்னணியிலும் உள்ளது. ஜனாதிபதியின் விருது பெற்றது தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பெருமை. உயிரை பொருட்படுத்தாமல் தமிழக காவல் துறை சேவைக்கான அங்கீகாரம். ஜாதி, மத கலவரங்கள் துப்பாக்கிச்சூடுகள் இல்லை. காவல் நிலையத்தில் மரணங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது. டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு முதல் காவலர் பதக்கங்கள் வழங்கப்படும்.
மேலும் படிக்க
புகையிலை பொருட்களின் மீது புதிய எச்சரிக்கும் வாசகம்: மத்திய அரசு அதிரடி!
ஆசியாவின் பணக்கார பெண்கள் பட்டியல்: முதலிடத்தைப் பிடித்தார் இந்தியப் பெண்!