இதய நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அதற்கு ஒரு அருமருந்தாக பால் பொருட்கள் திகழ்கின்றன என சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மனிதர்கள் தங்களது அன்றாட உணவில் ஒரு டம்ளர் பால், ஒரு கப் தயிர் அல்லது ஒரு துண்டு பாலாடை கட்டி, எப்போதாவது வெண்ணை அல்லது நெய்யை சேர்த்துக் கொண்டால் போதுமானது.
உணவில் அன்றாடம் பால் பொருட்கள் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 5 கண்டங்களில் உள்ள 21 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1 லட்சத்து 36 ஆயித்து 384 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் 9 வருடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் பாலில் உள்ள கொழுப்பு சத்து மனிதர்களை இதய நோய்களில் இருந்து காப்பாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 22 சதவீதம் இதய நோய்களில் இருந்தும், 34 சதவீதம் பக்கவாதம் நோயில் இருந்தும் காக்கும் திறன் கொண்டது.
இந்த ஆய்வறிக்கை சமீபத்தில் ‘லேன்செட்’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவில் தான் பெருமளவில் இதய நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஒருவித இதயநோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.
1990-ம் ஆண்டில் 2 கோடியே 50 லட்சம் பேர் இதய மற்றும் பக்கவாதத்தால் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 45 லட்சமானது.
இதய நோய் தாக்குதல்களால் கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஆந்திரா, இமாச்சல பிரதேசம், மராட்டியம், கோவா மற்றும் மேற்கு வங்காளத்தில் மரண விகிதம் அதிகமாக உள்ளது.
எனவே இதய நோயில் இருந்து தப்பிக்க பால் பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.