தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மையத்தின் விலைக் கணிப்புத் திட்டம் மூலம் விலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி டிசம்பர் மாதம், தக்காளி கத்தரி மற்றும் வெண்டைக்காய் என்ன விலை போகும் என்பதை விவசாயிகள் அறியலாம்.
TN-IAM திட்டம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மையத்தின் விலைக் கணிப்புத் திட்டத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், காய்கறிகளுக்கான சந்தை ஆலோசனையை உருவாக்கியுள்ளது. பொதுவாக, தமிழ்நாடு தக்காளி, கத்தரி மற்றும் வெண்டைக்காய்- ஐ அதிகமாக உற்பத்தி செய்வது மட்டுமின்றி நல்ல நுகர்வோரையும் ஈர்த்துள்ள காய்கறிகளாகும். எனவே, இந்த விலை முன்னறிவிப்பு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தக்காளி
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் (2022-23) முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, தமிழ்நாட்டில் தக்காளி பயிரிடப்படும் பரப்பளவு 0.34 லட்சம் ஹெக்டேர் மற்றும் 11.99 லட்சம் டன்கள் ஆகும். தமிழ்நாட்டில் தக்காளி விளையும் முக்கிய மாவட்டங்கள் கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் என்பது குறிப்பிடதக்கது. தற்போது, கோயம்பேடு மொத்த சந்தைக்கு தக்காளி வரத்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குறிப்பாக சாவடி, தொண்டாமுத்தூர், பூலுவம்பட்டி மற்றும் கர்நாடகா பகுதியில் இருந்து வருகிறது. பரப்பளவு அதிகரித்துள்ளதால், தக்காளி வரத்து அதிகமாக உள்ளதாகவும், தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும், வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கத்தரிக்காய்
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி (2022-23), கத்தரிக்காய் 0.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தமிழ்நாட்டில் 3.09 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் கத்தரி உற்பத்தியில் திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சிறந்து திகழ்கின்றன. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாச்சிபாளையம், ஆலாந்துறை, ஒட்டன்சத்திரம், தேனி, ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து தற்போது வரத்து இருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெண்டைக்காய்
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் (2022-23) முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, தமிழ்நாட்டில் வெண்டை சாகுபடியின் பரப்பளவு 0.19 லட்சம் ஹெக்டேர் மற்றும் 1.84 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகளவில் வெண்டைக்காய் வரத்து இருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டன்சத்திரம் மொத்த விற்பனைச் சந்தை மற்றும் கோயம்பேடு உழவர் சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி, வெண்டைக்காய் ஆகியவற்றின் விலையை விலைக் கணிப்புத் திட்டக் குழு ஆய்வு செய்தது. பகுப்பாய்வு முடிவுகளின்படி, அறுவடையின் போது (டிசம்பர் 2023) நல்ல தரமான தக்காளியின் பண்ணை விலை ஒரு கிலோவுக்கு ரூ.15 முதல் 17 ஆக இருக்கும். நல்ல தரமான கத்தரிக்காயின் பண்ணை விலை சுமார் ஒரு கிலோவுக்கு ரூ.22 முதல் 24கும் மற்றும் வெண்டைக்காய் சுமார் ஒரு கிலோ முறையே ரூ.18 முதல் 20 ஆகவும் இருக்கும். வர்த்தக ஆதாரங்களின்படி, பருவமழை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரத்து ஆகியவற்றின் அடிப்படையில் விலையில் மாற்றம் இருக்கலாம். எனவே, விவசாயிகள் அதற்கேற்ப விதைப்பு முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
Green House அமைக்க 1 லட்சம் மானியம் | CM Stalin : விவசாய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் | Agri News
முதல்வர் மு.க.ஸ்டாலின் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு!