விநியோத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் விழுப்புரத்திலும், சேலத்திலும் தொழில் முனைவோர் கூட்டம் நடைபெற உள்ளது.
விநியோத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் நபார்டு ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் தரம் பிரித்தல் மற்றும் சிப்பம் கட்டும் கூடம், முதன்மைப் பதப்படுத்தும் இயந்திரங்கள், குளிர் பதனக் கிடங்கு, பழுக்க வைக்கும் கூடம் ஆகிய அறுவடைக்குப் பின் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் கீழ்கண்ட இடங்களில் அமைக்கப்பட்டு வரும் முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்கள் பணிகள் முடிவடைந்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர தயார் நிலையில் உள்ளன.
சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம், தலைவாசல், வாழப்பாடி, எடப்பாடி மற்றும் கொளத்தூர் ஆகிய பகுதிகளிலும் , திருவண்ணாமலை மாவட்டத்தில் படவேடு, குப்பநத்தம் ஆகிய பகுதிகளிலும் முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மற்ற இடங்கள் முறையே,
கடலூர் மாவட்டம்:
- பண்ருட்டி
- குறிஞ்சிப்பாடி
விழுப்புரம் மாவட்டம்:
- ஒலக்கூர்
- வானூர்
கரூர் மாவட்டம்:
- அரவக்குறிச்சி
- மகாதானபுரம்
- வேலாயுதம்பாளையம்
விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் கட்டம்- II (Phase –II) -ன் கீழ் அமைக்கப்பட்டு வரும் முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற அழுகும் பொருட்களுடன் தானியங்கள், சிறு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உட்பட அனைத்து வேளாண் விளைபொருட்களையும் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் மேற்கண்ட முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்களில் சந்தை ஒருங்கிணைப்புப் பங்குதாரர்களின் தேவைக்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், இயந்திரங்கள் கொள்முதல் செய்தல் ஆகியவைகளுக்கான முன்மொழிவு கோரிக்கை (Request for Proposal) பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக தொடர்பாக தொழில் முனைவோர் கூட்டமானது விழுப்புரம், கடலுர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு 09.03.2023 அன்று விழுப்புரத்திலும், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 10.03.2023 அன்று சேலத்திலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் வணிகத்தில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்) மற்றும் விற்பனைக்குழு செயலாளர்களைத் தொடர்பு கொண்டு திட்டத்தின் சிறப்பம்சங்களை அறிந்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் காண்க:
ஜூலைக்குள் மீண்டும் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி- உதயநிதி வாக்குறுதி
வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை- தொழிலாளர் நலன் துறை அமைச்சர் அறிக்கை