வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தையை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
தோல்வியடைந்த பேச்சுவார்த்தை
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற 5 கட்ட பேச்சுவாா்த்தைகளில் எந்த தீா்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசு அளித்த பரிந்துரைகளை விவசாயிகள் நிராகரித்தனா். வேளாண் சட்டங்களை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவா்கள் கோரி வருகின்றனா்.
பிஎம் கிசான் திட்ட நிதி
இதனிடையே, பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கான 7வது தவணை நிதியை பிரதமர் மோடி அண்மையில் விடுவித்தார். இதன் மூலம் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதி அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி
பிஎம் கிசான் திட்ட நிதி விடுவிப்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியபோது, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உள்ளிட்ட சில நியாயமான கோரிக்கைகளை விவசாயிகள் முன்மொழிந்தனா். நாளடைவில் அந்தப் போராட்டத்தில் எதிா்க்கட்சிகள் புகுந்து, எந்தவிதத் தொடா்புமில்லாத கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினா். விவசாயிகளின் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையும் எதிா்க்கட்சிகள் எதிா்த்து வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.
பேச்சுவார்த்தை தொடர விருப்பம்
விவசாயிகளே குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தையைத் தொடா்வதற்கு மத்திய அரசு விருப்பமுடன் உள்ளது என்றார்.