காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேலூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், 1.52 லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.
நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் தூர்வாருதல், அரசு கட்டடங்களை தூர்வாருதல், மரக்கன்றுகள் நடுதல், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை ஊராட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஊராட்சியிலும், 100 நாள் வேலை திட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். இந்த பயனாளிகளுக்கு தினக்கூலியாக 281 ரூபாய் வழங்கப்படுகிறது.
தினசரி வருகைப் பதிவேட்டின்படி அந்தந்த பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டு துவங்கி, 50 நாட்களாகியும், பணிகள் துவங்க, அரசு நிர்வாக அனுமதி வழங்கவில்லை என, கூறப்படுகிறது. இதனால், வருமானம் இன்றி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். எனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், நடப்பாண்டுக்கான நிர்வாக ஆணையை அரசு வெளியிட வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயனாளி ஒருவர் கூறியதாவது: கடந்த நிதியாண்டில் பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்படாத கிராமங்களில் ஒன்றில் மட்டும் குறைந்த பணியாளர்களை கொண்டு பழைய பணி நடக்கிறது.
நடப்பாண்டுக்கான நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்படாததால், ஒன்றரை மாதங்களாக வருமானமின்றி தவித்து வருகிறோம். 100 நாள் வேலையை மட்டுமே நம்பி வாழும் எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி வகுக்கும் வகையில் நடப்பாண்டுக்கான நிர்வாக ஆணையை உடனடியாக வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேற்று முன்தினம், புதிய அரசாணை வந்தது. அந்தந்த வட்டங்களில், 'லேபர்' பட்ஜெட் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இறுதி பட்டியலை வழங்கவில்லை. சிக்கலுக்குப் பிறகுதான் நிதி விவரங்கள் வழங்கப்படும். அதன்பின், திட்டப்பணிகள் துவங்கும். ஆனால், கடந்த ஆண்டு நிலுவையில் உள்ள பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க: